ஐபிஎல் 2023: இம்பேக் பிளேயர் விதியில் முதல் வீரராக களமிறங்கிய துஷார் தேஷ்பாண்டே!
ஐபிஎல் தொடரில் முதல் முறையாக 'இம்பேக்ட் பிளேயர்' என்ற புதிய விதியும் அறிமுகம் செய்யப்படுகிறது. இதன்படி டாஸ் வென்ற பின் வழங்கப்படும் 11 வீரர்கள் அடங்கிய பட்டியலுடன் மாற்று வீரர்கள் 5 பேரின் பெயர்களையும் வழங்க வேண்டும். இதில் இருந்து ஒரு வீரரை ஆட்டத்தின் நடுவே பந்து வீச்சிலோ, அல்லது பேட்டிங்கிலோ மாற்று வீரராக பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த வகையில் ஏற்கெனவே 4 வெளிநாட்டு வீரர்கள் களத்தில் இருந்தால் இம்பேக்ட் பிளேயர் விதிமுறையின் கீழ் வெளிநாட்டு வீரரை களமிறக்க முடியாது. இதனால் இந்திய வீரரரைதான் களமிறக்க முடியும். அதேவேளையில் களத்தில் 3 வெளிநாட்டு வீரர்கள் இருந்தால் புதிய விதிமுறையின்படி மற்றொரு வெளிநாட்டு வீரரை களமிறக்கலாம். மாற்று வீரராக வெளியே செல்பவர் மீண்டும் தனது பங்களிப்பை வழங்க முடியாது.
'இம்பேக்ட் பிளேயர்' விதியை களநடுவரிடம் தகவல் தெரிவித்துவிட்டு விக்கெட் விழும்போதோ அல்லது பேட்ஸ்மேன் காயம் அடையும் போது பயன்படுத்தலாம். முக்கியமான இந்த விதியை 14ஆவது ஓவருக்கு முன்பாக பயன்படுத்த வேண்டும். மாற்று வீரராக வெளியே செல்பவர் 4 ஓவர்களை வீசியிருந்தாலும் 'இம்பேக்ட் பிளேயர்' விதிமுறையின் கீழ் உள்ளே வரும் வீரர் முழுமையாக 4 ஓவர்கள் பந்து வீச முடியும், பேட்டிங் செய்யவும் முடியும்.
இந்நிலையில், ஐபிஎல் தொடரில் முதல் இம்பேக்ட் பிளேயரை சென்னை அணி களமிறக்கியுள்ளது. குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் முதல் இன்னிங்சில் அம்பதி ராயுடு களமிறங்கி பேட்டிங் செய்தார். ஆனால், அவர் பீல்டிங்கின் போது இம்பேக்ட் பிளேயர் முறையில் மாற்றப்பட்டார். அதன்படி, அம்பதி ராயுடுவிற்கு பதிலாக 'இம்பேக்ட் பிளேயர்' விதிப்படி துஷார் தேஷ்பாண்டே களமிறங்கி விளையாடி வருகிறார்.
இதையடுத்து ஃபீல்டிங்கின் போது காயமடைந்த குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேன் வில்லியம்சன்னிற்கு பதிலாக தமிழக வீரர் சாட் சுதர்ஷன் இம்பெக்ட் பிளேயராக பேட்டிங் செய்ய களத்திற்கு வந்துள்ளார்.