ஐபிஎல் 2023: வெங்கடேஷ் ஐயர் அபார சதம்; மும்பை இந்தியன்ஸுக்கு 186 டார்கெட்!

Updated: Sun, Apr 16 2023 17:31 IST
IPL 2023: Venkatesh Iyer’s hundred help KKR to 185/6 in 20 overs! (Image Source: Google)

ஐபிஎல் தொடரின் 16அவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் 22ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்து களமிறங்கியது. 

அதன்படி கேகேஆர் அணியின் தொடக்க வீரர்களாக ரஹ்மனுல்லா குர்பாஸ் - நாராயன் ஜெகதீசன் இணை களமிறங்கினர். இதில் ஜெகதீசான் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதையடுத்து களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் தொடக்கம் முதல் பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசித்தள்ளினார். 

அதன்பின் மற்றொரு தொடக்க வீரரான் ரஹ்மனுல்லா குர்பாஸ் 8 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த கேப்டன் நிதீஷ் ராணா 5 ரன்களிலும், ஷர்துல் தாக்கூர் 13 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். ஆனால் மறுமுனையில் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வெங்கடேஷ் ஐயர் 49 பந்துகளில் தனது முதல் ஐபிஎல் மற்றும் டி20 சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் நடப்பு ஐபிஎல் சீசனில் சதமடித்த இரண்டாவது வீரர் எனும் பெருமையையும் பெற்றார். 

அதுமட்டுமின்றி கேகேஆர் அணிக்காக ஐபிஎல் தொடரில் சதமடித்த இரண்டாவது வீரர் எனும் சாதனையையும் படைத்துள்ளார். இதற்குமுன் கடந்த 2008ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் கேகேஆர் அணியின் பிராண்டன் மெக்கல்லம் சதமடித்ததுடன் 158 ரன்களைக் குவித்திருந்தார். அதன்பின் கிட்டத்திட்ட 15 ஆண்டுகளுக்கு பின் கேகேஆர் வீரர் ஒருவர் ஐபிஎல் தொடரில் சதமடித்துள்ளார். 

அதன்பின்னும் அதிரடியாக விளையாட முயன்ற வெங்கடேஷ் ஐயர் 51 பந்துகளில் 6 பவுண்டரி, 9 சிக்சர்கள் என 104 ரன்களை சேர்த்த நிலையில் மெரிடித் பந்துவீச்சில் ஜான்சனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து நட்சத்திர வீரர் ரிங்கு சிங் 18 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஜான்சன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 

இறுதியில் ஆண்ட்ரே ரஸ்ஸல் தனது பங்கிற்கு ஒரு சில பவுண்டரிகளை பறக்கவிட, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் கேகேஆர் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்களைச் சேர்த்தது. மும்பை அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஹ்ரித்திக் ஷோகீன் 2 விக்கெட்டுகளையும், டுவான் ஜான்சென், ரைலீ மெரீடித், பியூஷ் சாவ்லா, கேமரூன் க்ரீன் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை