ஐபிஎல் 2024: ஹர்திக், பியூஷ் அபார பந்துவீச்சு; மும்பை அணிக்கு 174 ரன்கள் இலக்கு!

Updated: Mon, May 06 2024 21:28 IST
ஐபிஎல் 2024: ஹர்திக், பியூஷ் அபார பந்துவீச்சு; மும்பை அணிக்கு 174 ரன்கள் இலக்கு! (Image Source: Google)

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற 55ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு வழக்கம் போல் டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். 

இருவரும் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் முதல் விக்கெட்டிற்கு 56 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதன்பின் 11 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் அபிஷேக் சர்மா தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய மயங்க் அகர்வாலும் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதத்தை நெருங்கிய டிராவிஸ் ஹெட் 7 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 48 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்ததுடன், அரைசதம் அடிக்கும் வாய்ப்பையும் தவறவிட்டார். 

அதன்பின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர வீரர்கள் நிதீஷ் ரெட்டி 20 ரன்களிலும், ஹென்ரிச் கிளாசென் 2 ரன்களிலும் மார்கோ ஜான்சென் 17 ரன்களுக்கும், ஷஃபாஸ் அஹ்மத் 10 ரன்களுக்கும், அப்துல் ஷமத் 3 ரன்களுக்கும் என அடுத்தடுத்து வரிசையாக சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து நடையைக் கட்டினர். இருப்பினும் அடுத்து களமிறங்கிய கேப்டன் பாட் கம்மின்ஸ் ஒரு சில பாவுண்டரிகளை அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கம்மின்ஸ் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 33 ரன்களைச் சேர்த்து ஃபினிஷிங் கொடுத்தார். 

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்களைச் சேர்த்தது. மும்பை இந்தியன்ஸ் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய கேப்டன் ஹர்திக் பாட்டியா மற்றும் பியூஷ் சாவ்லா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதனைத்தொடர்ந்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடவுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை