ஐபிஎல் 2024: இரு அணிகளின் போட்டி அட்டவணை மாற்றம்!

Updated: Tue, Apr 02 2024 20:24 IST
ஐபிஎல் 2024: இரு அணிகளின் போட்டி அட்டவணை மாற்றம்! (Image Source: Google)

இந்தியாவில் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனானது நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. மொத்தம் 14 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலிடத்தையும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

அதேசமயம் ஹர்திக் பாண்டியா தலைமையில் நடப்பு ஐபிஎல் சீசனை எதிர்கொண்டுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய மூன்று லீக் போட்டிகளிலும் அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்ததுடன் புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளது. இதனால் மீதமுள்ள லீக் போட்டிகளில் எந்த அணி வெற்றிபெற்று ஐபிஎல் குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

இந்நிலையில் இத்தொடரில் நடைபெறும் இரண்டு போட்டிகளுக்கான போட்டி அட்டவணையை ஐபிஎல் நிர்வாகம் மாற்றியுள்ளது. அதன்படி ராம நவமியை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக ஏப்ரல் 17 மற்றும் 18ஆம் தேதிகளில் நடக்க இருந்த ஐபிஎல் போட்டிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் ஏப்ரல் 17ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற இருந்த கொல்கத்தா- ராஜஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டி ஏப்ரல் 16ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதேப்போல் ஏப்ரல் 16ஆம் தேதி அஹ்மதாபாத்திலுள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருந்த குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டியானது ஏப்ரல் 17ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியானது சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்படிருந்தது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை