முதல் ஓவரிலேயே பட்லர், சாம்சனை காலி செய்த புவனேஷ்வர் குமார் - வைரல் காணொளி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி இன்று நடைபெற்றது. ஹைதாபாத்தில் உள்ள ராஜூவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 201 ரன்களைக் குவித்தது.
அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 12 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய அன்மோல்ப்ரீத் சிங் 5 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் இணைந்த டிராவிஸ் ஹெட் - நிதீஷ் ரெட்டி இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இருவரும் தங்களது அரைசதங்களை பதிவி செய்தனர்.
பின் 6 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 58 ரன்களில் டிராவிஸ் ஹெட் விக்கெட்டை இழந்தார். இருப்பினும் மறுபக்கம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிதீஷ் ரெட்டி 3 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் என 76 ரன்களையும், இறுதியில் அதிரடி காட்டிய ஹென்ரிச் கிளாசென் 3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 42 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தனர். ராஜஸ்தான் அணி தரப்பில் ஆவேஷ் கான் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஜோஸ் பட்லர் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை தொடக்கம் கொடுத்தனர். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தரப்பில் இன்னிங்ஸின் முதல் ஓவரை புவனேஷ்வர் குமார் வீச, அந்த ஓவரில் தனது முதல் பந்தை எதிர்கொண்ட ஜோஸ் பட்லர் ஸ்லீப் திசையில் நின்றிருந்த மார்கோ ஜான்செனிடம் கேட்ச் கொடுத்து பெவிலியனுக்கு திரும்பினார்.
அவரைத் தொடர்ந்து நடப்பு ஐபிஎல் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் முதல் இரண்டு பந்துகளை தடுத்து விளையாடிய நிலையில், புவனேஷ்வர் குமாரின் அபாரமான இன்ஸ்விங் பந்தில் க்ளீன் போல்டாகியதுடன், இந்த சீசனில் முதல் முறையாக டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். இதனால் ராஜஸ்தான் அணி முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை இழந்தது.