ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது சிஎஸ்கே!

Updated: Tue, Mar 26 2024 23:30 IST
ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது சிஎஸ்கே! (Image Source: Google)

17ஆவது சீசன் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 7ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் - ரச்சின் ரவீந்திரா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தொடக்கத்தில் இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட்டை விழாமல் பார்த்துக்கொண்டனர்.

அதன்பின் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரச்சின் ரவீந்திரா பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். அவருக்கு துணையாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டும் ஸ்டிரைக்கை ரொட்டேட் செய்ய, ரவீந்திரா பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்கினார். இதனால் சிஎஸ்கே அணி முதல் 5 ஓவர்களுக்குள்ளே 50 ரன்களைக் கடந்து அசத்தியது. அதன்பின் இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரச்சின் ரவீந்திரா 6 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 46 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

இதனையடுத்து களமிறங்கிய அஜிங்கியா ரஹானேவும் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க முடியாமல் 12 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் சாய் கிஷோரிடம் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய ஷிவம் தூபே சந்தித்த முதலிரண்டு பந்துகளையும் சிக்சர்களுக்கு விளாசி தனது வருகையை பதிவுசெய்தார். அவருக்கு துணையாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் அரைசதத்தை நெருங்கிய ருதுராஜ் கெய்க்வாட் 5 பவுண்டரி, ஒரு சிக்சர்கள் என 46 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 

ஆனாலும் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷிவம் தூபே 22 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்திய நிலையில், 2 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 51 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய சமீர் ரிஸ்வி தனது அறிமுக போட்டியிலேயே ரஷித் கான் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட்டு மிரட்டினார். அதன்பின் 14 ரன்கள் எடுத்த நிலையில் ரிஸ்வி தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய ரவீந்திர ஜடேஜாவும் 7 ரன்களில் ரன் அவுட்டானார். 

மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டேரில் மிட்செல் 23 ரன்களுடன் களத்தில் இருந்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்களைச் சேர்த்தது. குஜராத் டைட்டன்ஸ் அணி தரப்பில் ரஷித் கான் 2 விக்கெட்டுகளையும், மோஹித் சர்மா, ஸ்பென்ஸர் ஜான்சன், சாய் கிஷோர் ஆகியோ தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

இதனையடுத்து 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் கேப்டன் ஷுப்மன் கில் 8 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான விருத்திமான் சஹா 21 ரன்கள் எடுத்த நிலையில் தீபக் சஹார் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த தமிழக வீரர்கள் சாய் சுதர்ஷன் மற்றும் விஜய் சங்கர் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட்டை இழப்பை ஓரளவு தடுத்து நிறுத்தினர். 

பின் 12 ரன்கள் எடுத்த நிலையில் விஜய் சங்கர் தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய டேவிட் மில்லரும் 21 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் தொடர்ந்து நிதானமாக விளையாடிவந்த சாய் சுதர்ஷன் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 37 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் அணியின் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 11 ரன்களுக்கும், ரஷித் கான் 2 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து நடையைக் கட்டினர். இதனால் குஜராத் அணியின் தோல்வியும் உறுதியானது. 

அதன்பின் களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவற 20 ஓவர்கள் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 143 ரன்களை மட்டுமே சேர்த்தது. சிஎஸ்கே அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய தீபக் சஹார், முஸ்தஃபிசூர் ரஹ்மான் மற்றும் துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியதுடன், நடப்பு ஐபிஎல் தொடரில் தங்களது இரண்டாவது வெற்றியையும் பதிவுசெய்து அசத்தியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை