கிரிக்கெட் பேஸ்பாலாக மாறி வருகிறது - சாம் கரண்!

Updated: Sat, Apr 27 2024 12:38 IST
கிரிக்கெட் பேஸ்பாலாக மாறி வருகிறது - சாம் கரண்! (Image Source: Google)

17ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இத்தொடரில் நேற்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடபெற்ற லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக சுனில் நரேன் - சால்ட் களமிறங்கினர்.

இருவரும் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி பஞ்சாப் அணியின் பந்து வீச்சை மைதானத்தின் அனைத்து திசைகளுக்கும் பறக்கவிட்டனர். இதில் இருவரும் அரைசதம் விளாசி அசத்தினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 138 ரன்கள் குவித்தது. அதன்பின் சுனில் நரேன் 71 ரன்னில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து பிலிப் சால்ட் 75 ரன்னில் வெளியேறினார்.

அடுத்து வந்த வெங்கடேஷ் ஐயர் - ரஸல் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். அதிரடியாக விளையாடிய ரஸல் 24 ரன்கள் ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரும் அதிரடியாக விளையாடி 28 ரன்களில் விக்கெட்டை இழக்க, இறுதிவரை களத்தில் இருந்த வெங்கடேஷ் ஐயர் 39 ரன்களைச் சேர்த்து கடைசி பந்தில் ரன் அவுட்டானார்.  இதன்மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 261 ரன்கள் குவித்தது.

இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு பிரப்ஷிம்ரன் சிங் - ஜானி பேர்ஸ்டோவ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் அபாரமாக விளையாடிய பிரப்ஷிம்ரன் சிங் 18 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவுசெய்த நிலையில், 54 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய ரைலீ ரூஸோவ் 26 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தார். 

அதன்பின் ஜோடி சேர்ந்த ஜானி பேர்ஸ்டோவ் - ஷஷாங்க் சிங் இணை அதிரடியாக விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். இதில் ஜானி பேர்ஸ்டோவ் சதமடித்தும், ஷஷாங்க் சிங் அரைசதம் அடித்தும் அசத்தினர். இதில் பேர்ஸ்டோவ் 108 ரன்களையும், ஷஷாங்க் சிங் 68 ரன்களை எடுக்க பஞ்சாப் கிங்ஸ் அணி 18.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இப்போட்டியில் சதமடித்து அசத்திய ஜானி பேர்ஸ்டோவ் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

இந்நிலையில் இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய சாம் கரண், “இந்த போட்டியில் வெற்றிபெற்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இது எங்களுக்கு மிக முக்கியமான வெற்றி. சமீப காலங்களில் கிரிக்கெட் பேஸ்பாலாக மாறி வருகிறது. எங்களுக்கு சில கடினமான வாரங்கள் இருந்தன. ஆனால் நாங்கள் அங்கேயே தொங்கி நிற்காமல் தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டோம். அதற்கு எங்கள் பயிற்சியாளர்களும் நம்பிக்கை வழங்கினர். 

 

இன்றைய போட்டி நடைபெற்றது சிறிய மைதானம் மட்டுமின்றி இங்கு பனியின் தாக்கமும் இருந்தது. இப்போட்டியில் ஜானி பேர்ஸ்டோவ் விளையாடிய விதம் அற்புதமாக இருந்தது. அதேபோல் ஷஷாங்க் சிங் இத்தொடரின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பாக இருந்துள்ளார். அஷுதோஷ் சர்மாவும் அதுபோல் தான். எங்கள் அணியில் உள்ள அனைவரையும் நினைத்து நான் பெருமை கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை