ஐபிஎல் 2024: பவுண்டரிகளை பறக்கவிட்ட பேட்டர்கள்; ஆர்சிபியை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கிய சிஎஸ்கே!

Updated: Fri, Mar 22 2024 23:58 IST
ஐபிஎல் 2024: பவுண்டரிகளை பறக்கவிட்ட பேட்டர்கள்; ஆர்சிபியை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கிய சிஎஸ்கே! (Image Source: Google)

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இன்று விறுவிறுப்பாக தொடங்கியது. இத்தொடரின் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் - விராட் கோலி இணை தொடக்கம் கொடுத்தனர்.

இதில் ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் அடுத்தடுத்து பவுண்டரிகளாக விளாசி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். அதன்பின் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஃபாஃப் டூ பிளெசிஸ் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 8 பவுண்டரிகளுடன் 35 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ராஜத் பட்டிதாரும் ரன்கள் ஏதுமின்றி முஸ்தஃபிசூர் ரஹ்மானின் அதே ஓவரில் விக்கெட்டை இழந்தார். 

இதனையடுத்து களமிறங்கிய அதிரடி வீரர் கிளென் மேக்ஸ்வெல் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்து ஆர்சிபி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அதன்பின் விராட் கோலியுடன் இணைந்து அதிரடி வீரர் கேமரூன் க்ரீன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட்டை இழப்பை சிறிதுநேரம் தடுத்து நிறுத்தினார். பின் 21 ரன்களில் விராட் கோலியும், 18 ரன்களில் கேமரூன் க்ரீனும் அடுத்தடுத்து முஸ்தஃபிசூர் ரஹ்மான் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். 

அதன்பின் இணைந்த அனுஜ் ராவத் - தினேஷ் கார்த்திக் இணை தொடக்கத்தில் நிதானம் காட்டி விக்கெட் இழக்காமல் பார்த்துக்கொண்டனர். பின் இன்னிங்ஸின் 15ஆவது ஓவருக்கு பிறகு அதிரடி காட்ட தொடங்கிய இருவரும் அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்சர்ளுமாக விளாசி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அனுஜ் ராவத் 4 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 48 ரன்களையும், தினேஷ் கார்த்திக் 3 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 38 ரன்களையும் சேர்த்தனர். 

மேலும் இருவரும் இணைந்து 6ஆவது விக்கெட்டிற்கு 95 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்து அசத்தினர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்களைச் சேர்த்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய முஸ்தஃபிசூர் ரஹ்மான் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணிக்கு கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் - ரச்சின் ரவீந்திரா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் தங்களது முதல் பந்திலேயே பவுண்டரி விளாசி இன்னிங்ஸைத் தொடங்கினர். இதில் அதிரடியாக தொடங்கிய சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 3 பவுண்டரிகளுடன் 15 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 

அதன்பின் இணைந்த ரச்சின் ரவீந்திரா - அஜிங்கியா ரஹானே இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். அதிலும் தனது முதல் ஐபிஎல் போட்டியில் விளையாடிய ரச்சின் ரவீந்திரா சிறப்பாக விளையாடிய அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசினார். இதனால் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரச்சின் ரவீந்திரா 15 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 37 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 

பின்னர் களமிறங்கிய டேரில் மிட்செல்லும் களமிறங்கிய 5ஆவது மற்றும் 6ஆவது பந்துகளில் அடுத்தடுத்து சிக்சர்களை விளாசி தனது வருகையை பதிவுசெய்தார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய அஜிங்கியா ரஹானே தனது பங்கிற்கு 2 சிக்சர்களுடன் 27 ரன்களிலும், டேரில் மிட்செல் இரண்டு சிக்சர்கள்டன் 22 ரன்களுடனும் என அடுத்தடுத்து கேமரூன் க்ரீன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர்.

அதன்பின் இணைந்த ஷிவம் தூபே - ரச்சின் ரவீந்திரா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வெற்றியை நோக்கியும் அழைத்துச் சென்றனர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷிவம் தூபே 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 34 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா ஒரு சிக்சருடன் 25 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். 

இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது வெற்றியுடன் தொடங்கி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை