ஐபிஎல் 2024: ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தியது டெல்லி கேப்பிட்டல்ஸ்!

Updated: Tue, May 07 2024 23:34 IST
ஐபிஎல் 2024: ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தியது டெல்லி கேப்பிட்டல்ஸ்! (Image Source: Google)

இந்தியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடிபெற்ற 55ஆவது லீக் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. டெல்லியில் உள்ள அருன் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.

அதன்படி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் - அபிஷேக் போரல் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் வழக்கம்போல் அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து பவுண்டரியும் சிக்ஸர்களையும் விளாசிய ஃபிரேசர் மெக்குர்க் 19 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் 7 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 50 ரன்களை எடுத்திருந்த நிலையில் மெக்குர்க் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஷாய் ஹோப் ஒரு ரன்னிலும், அக்ஸர் படேல் 15 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

அதேசமயம் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் போரல் 28 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அவருக்கு துணையாக ரிஷப் பந்தும் ஒருசில பவுண்டரிகளை அடிக்க அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. பின் 7 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 65 ரன்களைச் சேர்த்த நிலையில் அபிஷேக் போரல் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 15 ரன்களை மட்டுமே எடுத்திருந்த ரிஷப் பந்தும் ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் அறிமுக வீரர் குல்பதீன் நைப் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். 

இதில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 19 ரன்கள் எடுத்திருந்த குல்பதீன் நைப் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ரஷிக் சலாமும் அடுத்தடுத்த பந்துகளில் பவுண்டரியை விளாசினார். அதேசமயம் மறுமுனையில் சிக்ஸர்களை பறக்கவிட்ட டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 41 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்களைச் சேர்த்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஜோஸ் பட்லர் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் அதிர்டையான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். அவருக்கு துணையாக ஜோஸ் பட்லரும் பவுண்டரிகளை அடிக்க அணியின் ஸ்கோரு உயர்ந்தது. அதன்பின் 2 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 19 ரன்களை சேர்த்த நிலையில் ஜோஸ் பட்லர் விக்கெட்டை இழந்தார். 

அதன்பின் களமிறங்கிய ரியான் பராக்கும் அதிரடியாக விளையாட, மறுபக்கம் சஞ்சு சாம்சனும் சிறப்பாக விளையாடி அசத்தினார். அதன்பின் சிக்ஸர்களை விளாசி வந்த ரியான் பராக் ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 27 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். ஆனாலும் மறுமுனையில் அபாரமாக விளையாடி வந்த சஞ்சு சாம்சன் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அவருக்கு துணையாக ஷுபம் தூபேவும் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்த, இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றியை நோக்கி முன்னேறியது. 

இதில் சதத்தை நோக்கி நகர்ந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 8 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் என 86 ரன்களைச் சேர்த்த நிலையில் மூன்றாம் நடுவரின் சர்ச்சைகுறிய தீர்ப்பால் பெவிலியன் திரும்பினார். அவரைத்தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஷுபம் தூபே 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 25 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய அறிமுக வீரர் டோனவன் ஃபெரீரா, ரவீச்சந்திரன் அஸ்வின், ரோவ்மன் பாவெல் உள்ளிட்ட வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் ராஜஸ்தான் அணியின் தோல்வியும் உறுதியானது. 

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்களை மட்டுமே சேர்த்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தரப்பில் கலீல் அஹ்மத், முகேஷ் குமார் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி இந்த சீசனில் தங்களது 6ஆவது வெற்றியைப் பதிவுசெய்தது. இதன்மூலம் நடப்பு ஐபிஎல் சீசனின் பிளே ஆஃப் சுற்றுக்கான போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் முன்னேறியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை