பனிப்பொழிவு எங்களது இந்த தோல்விக்கு முக்கிய காரணம் - ருதுராஜ் கெய்க்வாட்!

Updated: Wed, Apr 24 2024 13:48 IST
Image Source: Google

சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நேற்ற்ய் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து சிஎஸ்கே அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய சிஎஸ்கே அணியில் அஜிங்கியா ரஹான் ஒரு ரன்னிலும், டேரில் மிட்செல் 11 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். 

அதன்பின் களமிறங்கிய ரவீந்திர ஜடேஜாவும் 16 ரன்களோடு பெவிலியன் திரும்பினார். இதையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் - ஷிவம் தூபே இணை அதிரடியாக விளையாடி பவுண்டரியும், சிக்ஸர்களையும் விளாசித்தள்ளினர். இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் கெய்க்வாட் ஐபிஎல் தொடரில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவுசெய்து மிராட்டினார். 

அவருக்கு துணையாக விளையாடி வந்த ஷிவம் தூபே 66 ரன்கள் சேர்த்த நிலையில் ரன் அவுட்டாக, இறுதியில் மகேந்திர சிங் தோனி பவுண்டரி அடித்து இன்னிங்ஸை ஃபினிஷ் செய்தார். இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்களைக் குவித்தது. இதில் அதிகபட்சமக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 108 ரன்களைச் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் குயின்டன் டி காக் ரன்கள் ஏதுமின்றியும், கேஎல் ராகுல் 16 ரன்களுக்கும், தேவ்தத் படிக்கல் 13 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் தனது பங்கிற்கு 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 34 ரன்களை எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 

ஆனாலும் இப்போட்டியில் மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய மார்கஸ் ஸ்டோய்னி அதிரடியாக விளையாடி சதமடித்து அசத்தியதுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 13 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 124 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன் மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னைச் சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

இந்நிலையில் இந்த தோல்வி குறித்து பேசிய சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், “இந்த போட்டியில் தோல்வியடைந்தது பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது, ஆனால் இது மிக சிறந்த கிரிக்கெட் போட்டி. லக்னோ அணி அனைத்து வகையிலும் மிக சிறப்பாக செயல்பட்டது. போட்டியின் 14ஆவது ஓவர் வரை போட்டி எங்களது கட்டுப்பாட்டில் தான் இருந்தது, ஆனால் ஸ்டோய்னிஸ் தனது அதிரடி பேட்டிங்கின் மூலம் அனைத்தையும் மாற்றிவிட்டார்.

இன்றைய போட்டியில் பனிப்பொழிவு அதிகமாக இருந்ததும் எங்களது தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டது. பயிற்சியின் போதே பனிப்பொழிவு அதிகம் இருந்ததை கவனித்தோம். பனிப்பொழிவு காரணமாக எங்களது சுழற்பந்து வீச்சாளர்களால் எதுவுமே செய்ய முடியவில்லை. நாங்கள் விரைவாக இரண்டு விக்கெட்டை இழந்ததால் தான் ரவீந்திர ஜடேஜா 4ஆவது இடத்தில் பேட்டிங் செய்ய வந்தார்.

ஒருவேளை பவர்பிளேவுக்கு பிறகு விக்கெட்டுகள் வீழ்ந்திருந்தால் நிச்சயம் ஷிவம் தூபே தான் நான்காம் இடத்தில் களமிறங்கி இருப்பார். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் நாங்கள் நிர்ணயித்திருந்த இலக்கு வெற்றிக்கு போதுமானது இல்லை என்றே நான் நினைத்தேன். பனிப்பொழிவு எங்களது இந்த தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தாலும், லக்னோ அணி பேட்டிங்கில் செயல்பட்ட விதத்தை பாராட்டியே ஆக வேண்டும், இதன் மூலமே அவர்களுக்கு இந்த வெற்றி கிடைத்துள்ளது” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை