15 முதல் 20 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம் - தோல்வி குறித்து ஃபாஃப் டூ பிளெசிஸ்!

Updated: Sat, Mar 23 2024 10:40 IST
15 முதல் 20 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம் - தோல்வி குறித்து ஃபாஃப் டூ பிளெசிஸ்! (Image Source: Google)

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதில் நேற்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடியாது. அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணியானது அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக் ஆகியோரது உதவியுடன் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்களைச் சேர்த்தது. 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய சிஎஸ்கே அணியில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 15 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளிக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரச்சின் ரவீந்திரா 37 ரன்களிலும், அஜிங்கியா ரஹானே 27 ரன்களையும், டேரில் மிட்செல் 22 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

பின்னர் இணைந்த ஷிவம் தூபே - ரவீந்திர ஜடேஜா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் 18.4 ஓவர்களில் சிஎஸ்கே அணி இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியின் வெற்றிக்கு காரணமாக இருந்த சிஎஸ்கே வீரர் முஸ்தஃபிசூர் ரஹ்மான் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

இந்நிலையில் இப்போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ், “சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வலுவான அணி. அதிலும் குறிப்பாக மிடில் ஓவர்களில் அதிக பலம் கொண்ட அணி. மிடில் ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வது சாதரண விசயம் கிடையாது. அதே போல் நாங்கள் பேட்டிங்கில் 15 முதல் 20 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம், இதுவும் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்துவிட்டது. ஏனெனில் நாங்கள் முதல் 10 ஓவர்களில் பேட்டிங் செய்த பிட்ச் போன்று அடுத்த ஓவர்களில் இல்லை. 

சென்னை அணி சேஸிங்கில் வலுவான அணி என்பது அனைவருக்கும் தெரியும்.  மிடில் ஓவர்களில் சென்னை அணியின் இரண்டு முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி சென்னை அணி மீது அழுத்தத்தை ஏற்படுத்தினோம்.  ஆனால் நாங்கள் வெற்றிக்கு போதுமான ரன்கள் அடிக்க தவறியதால் சென்னை அணியின் வெற்றியும் எளிதாகிவிட்டது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்ததில் தவறு இருப்பதாக நான் கருதவில்லை.

இந்த ஆடுகளத்தின் புள்ளி விபரங்கள் முதலில் பேட்டிங் செய்த அணிகளுக்கே சாதமாக இருந்ததை பார்க்க முடிகிறது. தினேஷ் கார்த்திக் மற்றும் அனுஜ் ராவத் ஆகியோர் விளையாடிய விதம் மகிழ்ச்சியளிக்கிறது. அதிலும் குறிப்பாக தினேஷ் கார்த்திக் தனது சீசனை இப்படி அதிரடியாக தொடங்கியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. குறிப்பாக நீண்ட நாள்களுக்கு பின் கிரிக்கெட் விளையாடும் அவர் இந்த ஃபார்மில் இருப்பது சிறப்பானது” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை