அபாரமான ஸ்டம்பிங் செய்து மிரட்டிய ஹென்ரிச் கிளாசென் - வைரல் காணொளி!

Updated: Tue, Apr 09 2024 22:41 IST
Image Source: Google

பஞ்சாப் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி இன்று நடைபெற்றது. சண்டிகரில் நடைபெற்ற இப்போட்டியில்  டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் டிராவிஸ் ஹெட் 22 ரன்களுக்கும், ஐடன் மார்க்ரம் ரன்கள் ஏதுமின்றியும், அபிஷேக் சர்மா 16 ரன்களுக்கும், ராகுல் திரிபாதி, ஹென்ரிச் கிளாசென் போன்ற வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

பின்னர் இணைந்த நிதீஷ் ரெட்டி - அப்துல் சமத் ஆகியோர் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிதீஷ் ரெட்டி தனது முதல் அரைசதத்தைப் பதிவுசெய்ததுடன், 4 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 64 ரன்களைச் சேர்த்தார். பஞ்சாப் கிங்ஸ் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்களில் 29 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அதேசமயம் சாம் கரண் மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோரும் தங்கள் பங்கிற்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களைக் குவித்தது. இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோவ் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அதிரடிய வீரர் பிரப்ஷிம்ரன் சிங்கும் நான்கு ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அவர்களைத் தொடர்ந்து அதிரடியாக விளையாடும் முனைப்பில் இருந்த ஷிகர் தவான் 14 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஹென்ரிச் கிளாசெனின் அபாரமான ஸ்டம்பிங்கின் மூலம் தனது விக்கெட்டை இழந்தார். 

 

அதன்படி இன்னிங்ஸின் 5ஆவது ஓவரை புவனேஷ்வர் குமார் வீச அதனை ஷிகர் தவான் எதிர்கொண்டார். இன்றைய ஆட்டத்தில் ஷிகர் தவான் இறங்கி வந்து பந்துகளை அடித்ததைக் கணித்த ஹைதராபாத் அணியின் கீப்பர் ஹென்ரிச் கிளாசென் அந்த ஓவரை வேகப்பந்து வீச்சாளர் வீசிய நிலையிலும் ஸ்டம்பிற்கு அருகே வந்து நின்றார். அப்போது அந்த ஓவரின் 4ஆவது பந்தை புவனேஷ்வர் குமார் 141 கிமீ வேகத்தில் வீச, ஷிகர் தவான் இறங்கி வந்து அடிக்கும் முயற்சியில் பந்தை தவறவிட்டார். இதனை சரியாக கணித்த கிளாசென் அதிவேகமாக வந்த பந்தை பிடித்ததுடன், அதனை ஸ்டம்பிங் செய்தும் அசத்தினார். 

இதன்மூலம் ஷிகர் தவான் 2 பவுண்டரிகளுடன் 14 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். இந்நிலையில் அதிவேகமாக வந்த பந்தை பிடித்ததுடன் அதனை ஸ்டம்பிங் செய்து அசத்திய ஹென்ரிச் கிளாசெனின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து தற்போதுவரை பஞ்சாப் கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது. மேலும் சிக்கந்தர் ரஸா - ஷஷாங்க் சிங் இருவரும் இணைந்து அணியை தோல்வியிலிருந்து மீட்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை