வெற்றிபெற சில நேரங்களில் உங்களுக்கு அதிர்ஷ்டமும் தேவை - ருதுராஜ் கெய்க்வாட்!

Updated: Tue, Apr 09 2024 12:34 IST
Image Source: Google

சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று சென்னையிலுள்ள எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் அணி சிஎஸ்கே அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 137 ரன்களை மட்டுமே சேர்த்தது. 

அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 34 ரன்களைச் சேர்த்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா மற்றும் துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து எளிய இலக்கை நோக்கி விளையாடிய சிஎஸ்கே அணியில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், இந்த சீசனில் தனது முதல் அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

இதன்மூலம் சிஎஸ்கே அணி 17.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி இந்த சீசனில் தங்களது மூன்றாவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ரவீந்திர ஜடேஜா இப்போட்டியின் ஆட்டநாயகன் விருதினை வென்றார். 

இந்நிலையில் இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், “இது எனக்கு சற்று ஏக்கமான ஒன்று தான். ஏனெனில் எனது முதல் ஐபிஎல் அரைசதத்தின் போது தோனியும் நானும் இணைந்து ஆட்டத்தை முடித்தோம். அதேபோல் கேப்டனாக முதல் அரைசதம் அடித்த போதும் நானும் அவரும் இணைந்து போட்டியை முடித்துள்ளோம். ரஹானே காயமடைந்ததால் இப்போட்டியில் கடைசி வரை களத்தில் நிற்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருந்தது. 

இந்த பிட்சில் 150 முதல் 160 ரன்கள் அடிக்க கூடியது என்றே நினைக்கிறேன். மேலும் நீங்கள் எளிதாக சிக்ஸர்களை அடிக்கும் ஆடுகள் இதுவல்ல. அதைத்தான் நாங்கள் பல ஆண்டுகளாக இங்கு செய்துவருகிறோம். மேலும் நாங்கள் ஜடேஜாவை எப்போதும் பவர் பிளே முடிவடைந்ததும் பந்துவீச கொண்டுவருவோம். சிஎஸ்கே அணியில் உள்ள யாருக்கும் என்ன செய்ய வேண்டும் என்று நான் சொல்ல தேவையில்லை. அனைவருக்கும் என்ன செய்ய வேண்டும் அவர்களுக்கு நன்றாக தெரியும்.

மேலும் எங்களிடம் தோனி மற்றும் ஃபிளெமிங் இருவரும்  உள்ளனர். நாங்கள் இப்போட்டியை மொதுவாக  தொடங்கினோம் என்று நினைக்கவில்லை. டி20 கிரிக்கெட்டைப் பொறுத்தவரையில் ஒரு சில பந்துகளிலேயே  ஆட்டம் மாறிவிடும். அதனால் சில நேரங்களில் அதிர்ஷ்டம் உங்களுக்கு தேவையாக இருக்கும். அதேபோல் எனது ஸ்ட்ரைக் ரேட் பற்றி விவாதங்கள் எழலாம், இன்று அதுகுறித்து நிபுணர்களிடம் ஆலோசிக்க எனக்கு நேரம் கிடைக்கும்.  போட்டியில் வெற்றிபெறுவது என்பது மகிழ்ச்சியான ஒன்று” என தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை