இப்படி ஒருஅறிமும் இருக்கும் என்று நினைத்ததில்லை - மயங்க் யாதவ்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 11ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லக்னோவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக குயின்டன் டி காக் 54 ரன்களையும், நிக்கோலஸ் பூரன் 42 ரன்களையும் சேர்த்தனர். பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் சாம் கரண் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஷிகர் தவான் - ஜானி பேர்ஸ்டோவ் இணை அதிரடியான தொடக்கத்தை கொடுத்தாலும், லக்னோ அணி தரப்பில் அறிமுக வீரராக களமிறங்கிய மயங்க் யாதவ் வேகத்தில் அந்த அணி வீரர்கள் தடுமாறினர். இதில் ஜானி பேர்ஸ்டோவ் 42 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்திருந்த கேப்டன் ஷிகர் தவான் 70 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.
அதேபோல் அதிரடி வீரர்கள் பிரப்ஷிம்ரன் சிங், ஜிதேஷ் சர்மா, சாம் கரண் போன்ற வீரர்களும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்களை மட்டுமே எடுத்தது. லக்னோ அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய மயங்க் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
மேலும் தனது அறிமுக போட்டியிலேயே அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மயங்க் யாதவ் ஆட்டநாயகன் விருதை வென்றார். இப்போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்றது குறித்து பேசிய மயங்க் யாதவ், ஐபிஎல் தொடரில் எனக்கு இப்படி ஒரு நல்ல அறிமும் இருக்கும் என்று நான் எப்போதும் நினைத்ததில்லை. போட்டிக்கு முன்னதாக நான் சற்று பதற்றமாக இருந்தேன். இருப்பினும் என்னுடைய வேகத்தில் சரியாக ஸ்டம்ப்களை குறி வைக்க முயற்சித்தேன்.
ஆரம்பத்தில் மெதுவான பந்துகளை பயன்படுத்துவதை பற்றி யோசித்தேன். ஆனால் பேட்டர்களை கருத்தில் கொண்டு வேகமான பந்துகளையே வீசினேன். இப்போட்டியில் எனது முதல் விக்கெட்டாக ஜானி பேர்ஸ்டோவை வீழ்த்தியது சிறப்பானது. இளம் வயதிலேயே அறிமுகமாவது என்பது நல்லது. எனக்கு கிரிக்கெட்டில் சில இலக்குகள் உள்ளன, ஆனால் காயத்தை சந்தித்தால் அதனை என்னால் செய்ய இயலாது" என்று தெரிவித்துள்ளார்.