இந்த போட்டியில் வெற்றிக்கு உதவியதில் மகிழ்ச்சி - சூர்யகுமார் யாதவ்!

Updated: Tue, May 07 2024 15:37 IST
Image Source: Google

மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நேற்று நடைபெற்றது. மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது மும்பை அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்களைச் சேர்த்தார். 

அந்த அணியில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 48 ரன்களையும், பாட் கம்மின்ஸ் 35 ரன்களையும் சேர்த்தார். மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில் கேப்டன் ஹர்திக் பாண்டியா, பியூஷ் சாவ்லா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதனையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் இஷான் கிஷான், ரோஹித் சர்மா மற்றும் நமந்தீர் சிங் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். 

அதன்பின் இணைந்த சூர்யகுமார் யாதவ் - திலக் வர்மா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர்.  இப்போட்டியில் அபார ஆட்டதை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ் 51 பந்துகளில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 17.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இப்போட்டியில் சதமடித்த சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

இந்நிலையில் ஆட்டநாயகன் விருதை வென்ற பின் பேசிய சூர்யகுமார் யாதவ்,  “இதனை நான் நீண்ட நாள்கள் கழித்து செய்கிறேன். ஏனெனில் இப்போட்டியில் தான் முழுமையாக 20 ஓவர்கள் பீல்டிங் செய்து 18 ஓவர்கள் வரை நான் பேட்டிங் செய்துள்ளேன். அதனால் கொஞ்சம் சோர்வு இருந்தது. மற்றபடி எந்த பிரச்சினையும் இல்லை. அந்த நேரத்தில் நான் மும்பை அணிக்கு தேவைப்பட்டேன் என்று கருதினேன். 

குறிப்பாக கடைசி வரை ஒருவர் பேட்டிங் செய்ய வேண்டிய சூழ்நிலையில் நான் சென்று விளையாடினேன். களத்தில் என்னுடைய நேரத்தை மகிழ்ச்சியுடன் எதிர்கொண்டேன். அது மும்பை ஸ்கூலின் கலையாகும். வான்கடே மைதானத்தில் நான் நிறைய கிரிக்கெட்டை விளையாடியுள்ளேன். பந்து சீம் செய்வதை நிறுத்தியதும் நான் என்னுடைய அனைத்து ஷாட்டுகளையும் விளையாடினேன்” என்று தேரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை