அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்ட ஜேக் ஃபிரெசர் மெக்குர்க் - காணொளி!

Updated: Sat, Apr 20 2024 22:31 IST
அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்ட ஜேக் ஃபிரெசர் மெக்குர்க் - காணொளி! (Image Source: Google)

டெல்லி கேப்பிட்டல்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி இன்று நடைபெற்றது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ஷபாஸ் அஹ்மத் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 266 ரன்களைக் குவித்தது. 

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட் 11 பவுண்டரி, 6 சிக்ஸர்களுடன் 89 ரன்களையும், ஷபாஸ் அஹ்மத் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 59 ரன்களையும், அபிஷேக் சர்மா 2 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 46 ரன்களையும் சேர்த்தனர். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், அக்ஸர் படேல், முகேஷ் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 

இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு பிரித்வி ஷா அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். முதல் ஓவரின் முதல் 4 பந்துகளையும் பவுண்டரிக்கு விளாசிய பிரித்வி ஷா, 5ஆவது பந்தில் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் நட்சத்திர வீரர் டேவிட் வார்னரும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதனால் டெல்லி அணி 25 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

பின்னர் ஜோடி சேர்ந்த ஜேக் ஃபிரெசர் மெக்குர்க் - அபிஷோக் போரல் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜேக் ஃபிரெசர் மெக்குர்க், இன்னிங்ஸின் மூன்றாவது ஓவரை வீசிய வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் அடுத்தடுத்து மூன்று பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 30 ரன்களை விளாசித் தள்ளினார். 

 

தொடர்ந்து இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 15 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து, நடப்பு ஐபிஎல் தொடரில் அதிவேகமாக அரைசதம் அடித்த வீரர் எனும் சாதனையை படைத்தார். அதன்பின்னும் அதிரடியைக் கைவிடாத மெக்குர்க், மயங்க் மார்கண்டே ஓவரிலும் அடுத்தடுத்து மூன்று சிக்ஸர்களை விளாசிய நிலையில் அதே ஓவரில் தனது விக்கெட்டையும் இழந்தார். 

 

இதனால் 18 பந்துகளில் 5 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் என 65 ரன்கள் எடுத்த நிலையில் ஜேக் ஃபிரெசர் மெக்குர்க் பெவிலியன் திரும்பினார். இந்நிலையில் இப்போட்டியில் டெல்லி அணியையும் போட்டியில் நிலைநிறுத்திய ஜேக் ஃபிரெசர் மெக்குர்க் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசிய காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போதுவரை டெல்லி அணி 4 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்களை எடுத்துள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை