ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 41ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஹைதராபாத்தில் உள்ள ராஜூவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. இதையடுத்து அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஃபாஃப் டூ பிளெசிஸ் - விராட் கோலி இணை தொடக்கத்திலேயே அதிரடியாக விளையாடி அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். 

Advertisement

பின் 25 ரன்களில் கேப்டன் டு பிளெசிஸ் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வில் ஜேக்ஸும் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் விராட் கோலியுடன் இணைந்த ராஜத் பட்டிதார் அதிரடியாக விளையாடி 19 பந்துகளில் அரைசதத்தைப் பதிவுசெய்தார். பின் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 50 ரன்கள் எடுத்த நிலையில் ராஜத் பட்டிதார் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த விராட் கோலியும் தனது அரைசதத்தை பதிவுசெய்த கையோடு, 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 51 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

Advertisement

பின்னர் களமிறங்கிய கேமரூன் க்ரீன் ஒருபக்கம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வர, மறுபக்கம் களமிறங்கிய மஹிபால் லாம்ரோர் 7 ரன்களுக்கும், தினேஷ் கார்த்திக் 11 ரன்களுக்கும், ஸ்வப்நில் சிங் 12 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேமரூன் க்ரீன் 37 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்களைச் சேர்த்தது. ஹைதராபாத் அணி தரப்பில் ஜெய்தேவ் உனாத்கட் 3 விக்கெட்டுகளையும், நடராஜன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஹைதராபாத் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் வகையில் டிராவிஸ் ஹெட் ஒரு ரன்னில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஐடன் மார்க்ரமும் 7 ரன்களில் நடையைக் கட்டினர். அதேசமயம் அதிரடியாக விளையாடி வந்த 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் நிதீஷ் ரெட்டி 13 ரன்களுக்கும், ஹென்ரிச் கிளாசென் 7 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, ஹைதராபாத் அணி 69 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் களமிறங்கிய ஷாபாஸ் அஹ்மத் பொறுப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். 

மறுபக்கம் அதிரடியாக விளையாட முயற்சித்த அப்துல் சமத் 10 ரன்களிலும், அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்ட கேப்டன் பாட் கம்மின்ஸ் ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 31 ரன்களுக்கும், புவனேஷ்வர் குமார் 13 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் 8 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. ஆர்சிபி தரப்பில் ஸ்வப்நில் சிங், கரண் சர்மா, கேமரூன் க்ரீன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர், இதன்மூலம் ஆர்சிபி அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News