ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் நேற்று நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஈடன் கார்டனில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் அணி ஆண்ட்ரே ரஸல், பிலிப் சால்ட் ஆகியோரது அரைசதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆண்ட்ரே ரஸல் 3 பவுண்டரி, 07 சிக்சர்கள் என 64 ரன்களை சேர்த்தார். 

Advertisement

இதனையடுத்து கடின இலக்கை நோக்கி விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் மயங்க் அகர்வால் 32 ரன்களையும், அபிஷேக் சர்மா 32 ரன்களையும் சேர்த்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்தனர். அதன்பின் களமிறங்கிய ராகுல் திரிபாதி 20 ரன்களுக்கும், ஐடன் மார்க்ரம் 18 ரன்களுக்கும், அப்துல் சமத் 15 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தார். ஆனால் மறுமுனையில் களமிறங்கிய ஹென்ரிச் கிளாசென் அதிரடியாக விளையாடியதுடன் அரைசதம் கடந்தும் அசத்தினார். 

Advertisement

இதன்காரணமாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றிக்கு கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவை என்ற நிலையில், கேகேஆர் தரப்பில் ஹர்ஷித் ரானா கடைசி ஓவரை வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தில் சிக்சர் விளாசிய ஹென்ரிச் கிளாசென், அடுத்த பந்தில் ஒரு ரன்னை மட்டும் எடுத்தார். அதன்பின் மூன்றாவது பந்த எதிர்கொண்ட ஷபாஸ் அஹ்மத் விக்கெட்டை இழக்க, அந்த ஓவரின் 5ஆவது பந்தை எதிர்கொண்ட ஹென்ரிச் கிளாசெனும் 63 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதனால் கடைசி பந்தில் ஹைதராபாத் அணி வெற்றிக்கு 5 ரன்கள் தேவை என்ற நிலையில் கேப்டன் பாட் கம்மின்ஸ் எதிர்கொண்டார். 

கடைசி பந்தை ஹர்ஷித் ரனா குறைந்த வேகத்தில் வீச அதனை கணிக்க தவறிய பாட் கம்மின்ஸ் பந்தை தொடாமல் தவறவிட்டார். இதன்மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்நிலையில் இப்போட்டியில் அபாரமாக பந்துவீசி கேகேஆர் அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த ஹர்ஷித் ரானாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

 

அதன்படி இப்போட்டியில் மயங்க் அகர்வாலின் விக்கெட்டை கைப்பற்றிய ஹர்ஷித் ரானா அவரை வழியனுப்பும் வகையில் ஆக்ரோஷமான கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். ஆனால் அது ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக பார்க்கப்பட்டது. அதுமட்டுமின்றி ஹென்ரிச் கிளாசென் விக்கெட்டை கைப்பற்றிய சமயத்தில் ஹர்ஷித் ரானா அதே சைகையை செய்தார். இதன் காரணமாக ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக போட்டி கட்டணத்திலிருந்து 60 சதவீதம் அபராதம் விதிப்பதாக ஐசிசி நிர்வாகக்குழு அறிவித்துள்ளது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News