ஐபிஎல் 2024: கஸ் அட்கின்சனுக்கு பதிலாக துஷ்மந்தா சமீராவை ஒப்பந்தம் செய்தது கேகேஆர்!

Updated: Mon, Feb 19 2024 20:19 IST
ஐபிஎல் 2024: கஸ் அட்கின்சனுக்கு பதிலாக துஷ்மந்தா சமீராவை ஒப்பந்தம் செய்தது கேகேஆர்! (Image Source: Google)

ஐபிஎல் என்றழைக்கப்படும் இந்தியன் பிரீமியர் லீக் தொடர் வெற்றிகரமாக 16 சீசன்களை கடந்து 17ஆவது சீசனை எதிர்நோக்கி காத்திருக்கிறது. அதன்படி வரும் மார்ச் மாதம் இறுதியில் இத்தொடர் தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனால் இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் தற்போதிலிருந்தே தங்களது பயிற்சிகளை தொடங்கியுள்ளன. 

மேலும் நடப்பாண்டு ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரும் நடைபெறவுள்ளதால், அத்தொடருக்கு முன்னதாக வீரர்கள் தங்களது திறனை நிரூபிப்பதற்கான இடமாக நடப்பு ஐபிஎல் தொடர் இருக்கவுள்ளது. மேலும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்களைக் கொண்ட டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியும் தேர்வு செய்யப்படவுள்ளதாக பிசிசிஐயும் தெரிவித்துள்ளது.  இதன் காரணமாகவும் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

இந்நிலையில், நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாட இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் கஸ் அட்கின்சன் ஒப்பந்தமானார். நடந்து முடிந்த ஐபிஎல் மினி வீரர்கள் ஏலத்தில் கஸ் அட்கின்சனை ரூ. 1 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலம் எடுத்திருந்தது. இந்நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கஸ் அட்கின்சனின் பணிச்சுமையை நிர்வகிக்க விரும்புவதால் அவர் நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார் என கூறப்படுகிறது.

முன்னதாக இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணியில் விளையாடிய கஸ் அட்கின்சன், அதன்பின் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திலும் விளையாடினார். பின்னர் தற்போது நடைபெற்றுவரும் இந்திய அணிக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணியிலும் கஸ் அட்கின்சன் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

இந்நிலையில், ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய கஸ் அட்கின்சனுக்கு பதிலாக இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்தா சமீரா அவரது அடிப்படி தொகையான ரூ.50 லட்சத்திற்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தமாகியுள்ளார். முன்னதாக ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்காக துஷ்மந்தா சமீரா விளையாடியது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை