மயங்க் யாதவின் காயம் குறித்து அப்டேட் கொடுத்த குர்னால் பாண்டியா!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று லக்னோவிலுள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 163 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டொய்னிஸ் 58 ரன்களைக் குவித்தார். குஜராத் அணி தரப்பில் உமேஷ் யாதவ் மற்றும் தர்ஷன் நல்கண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஷுப்மன் கில், சாய் சுதர்ஷன் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்த நிலையில், மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். இதனால் அந்த அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 130 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. லக்னோ அணி தர்பபில் அபாரமாக பந்துவீசிய யாஷ் தாக்கூர் 5 விக்கெட்டுகளையும், குர்னால் பாண்டியா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதன்மூலம் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது. மேலும் இப்போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த யாஷ் தாக்கூர் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் இந்த ஆட்டத்தில் ஒரு ஓவர் வீசிய உடன் காயம் காரணமாக லக்னோ அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் ஆட்டத்தில் இருந்து வெளியேறினார்.
ஆனால் அவரது காயம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் மயங்க் யாதவின் காயம் குறித்து கருத்து தெரிவித்த குர்னால் பாண்ட்யா, “மயங்க் யாதவுக்கு என்ன ஆனது என்பது எனக்கு சரியாக தெரியவில்லை. ஆனால் போட்டி நடைபெறும் போதே நான் அவரிடம் சில நொடிகள் பேசினேன். அப்போது அவர் நன்றாக இருந்தார். இதனால் அவர் அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடுவார் என எதிர்பார்க்கிறேன். வலைப்பயிற்சியில் நெருப்பாக செயல்படும் அவர் கடந்த வருடம் காயத்தால் விளையாடவில்லை. இருப்பினும் அவருக்கு பிரகாசமான வருங்காலம் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.