காயத்தால் அவதிபடும் குல்தீப் யாதவ்; டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு பின்னடைவு!

Updated: Fri, Apr 05 2024 22:36 IST
காயத்தால் அவதிபடும் குல்தீப் யாதவ்; டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு பின்னடைவு! (Image Source: Google)

இந்தியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரில் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் எந்த அணி கோப்பையை வென்று சாதிக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதில் ரிஷப் பந்த் தலைமையில் களமிறங்கியுள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் ஒரு வெற்றி, மூன்று தோல்விகளைச் சந்தித்துள்ளது. 

அதிலும் குறிப்பாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அந்த அணி 272 ரன்களை வாரி வழங்கியதுடன், 166 ரன்களில் ஆல் அவுட்டாகி 106 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. இதன் காரணமாக நடப்பு ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் 9ஆம் இடத்திற்கும் தள்ளப்பட்டுள்லது. இந்நிலையில் டெல்லி அணியின் அடுத்தடுத்த தோல்விகளுக்கு அந்த அணியின் பந்துவீச்சாளர்கள் முக்கிய காரணமாக இருந்து வருகின்றனர்.

அந்த வகையில் அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் காயம் காரணமாக அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடமல் இருந்து வருவது அணிக்கு பெரும் பின்னடைவாக மாறியுள்ளது. இந்நிலையில் காயத்தால் அவதிப்பட்டுவரும் குல்தீப் யாதவ், காயத்திலிருந்து முழுமையாக குணமடையாததால் மேலும் சில போட்டிகளை தவறவிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 

அதன்படி, “ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது இடுப்பு பகுதியில் காயத்தை சந்தித்த குல்தீப் யாதவ் தற்போது சிகிச்சையில் இருந்துவருகிறார். ஆனால் அவர் திரும்பிவரும் செய்திகுறித்து இன்னும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி உறுதியாக எந்தவொரு தகவலையும் தெரிவிக்கவில்லை. மேலும் குல்தீப் விளையாடுவதற்கு சிரமப்படுவதால் தொடர்ந்து ஓய்வில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்” என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக அவர் அடுத்து நடைபெறவுள்ள ஒருசில போட்டிகளிலும் விளையாடமாட்டார் என கூறப்படுகிறது. இது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அடுத்ததாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக வரும் 07ஆம் தேதி மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை