கடந்த வருடமே தோனி இதுகுறித்து ஹிண்ட் கொடுத்து விட்டார் - கேப்டன்ஷிப் குறித்து ருதுராஜ் கெய்க்வாட்!

Updated: Fri, Mar 22 2024 13:47 IST
கடந்த வருடமே தோனி இதுகுறித்து ஹிண்ட் கொடுத்து விட்டார் - கேப்டன்ஷிப் குறித்து ருதுராஜ் கெய்க்வாட்! (Image Source: Google)

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இன்று கோலாகலமாக தொடங்கவுள்ளது. இத்தொடரின் முதல் போட்டியிலேயே ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும்வகையில் முதல் லீக் போட்டியிலேயே நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அந்தவகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த வாரம் முதலே சென்னையில் முகாமிட்டு தங்களது பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அறிவிப்பு ஒன்று வெளியானது. 

ஐபிஎல் தொடரில் மிகவும் வெற்றிகரமான கேப்டனாக பார்க்கப்படும் மகேந்திர சிங் தோனி நடப்பு ஐபிஎல் சீசனில் தனது கேப்டன் பதவியிலிருந்து விலகியுள்ளார். மேலும் மகேந்திர சிங் தோனிக்கு பதிலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக இளம் அதிரடி வீரர் ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். 

மேலும், இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில், ஐபிஎல் 2024ஆம் ஆண்டு தொடர் தொடங்குவதற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த மகேந்திர சிங் தோனி தனது கேப்டன் பொறுப்பை ருதுராஜ் கெய்க்வாட்டிடம் ஒப்படைத்துள்ளார்” என்று அறிவித்தது. இந்நிலையில், தனக்கு கேப்டன் பொறுப்பை கொடுப்பேன் என்று கடந்த வருடமே தோனி மறைமுகமாக என்னிடம் கூறினார் என்று ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய ருதுராஜ் கெய்க்வாட், “சிஎஸ்கே அணியின் கேப்டன்சிப்பிற்காக நான் மாற வேண்டும் என்று நினைக்கவில்லை. ஏதோ ஒரு தருணத்தில் கேப்டன்ஷிப் பொறுப்பை கொடுப்பேன் என்று கடந்த வருடமே தோனி மறைமுகமாக என்னிடம் தெரிவித்திருந்தார். இந்த பொறுப்பை ஏற்க தயாராக இருங்கள் என்று தோனி கூறியிருந்தார். எனவே இம்முறை சிஎஸ்கே அணிக்காக விளையாட வந்தபோது அவர் வலைப்பயிற்சிகளை செய்தார்.

சில தினங்களுக்கு முன் சமூக வலைதளத்தில் அவர் ‘புதிய ரோல்’ என்று பதிவிட்டது எனக்கு நினைவிருக்கிறது. அப்போது அனைவரும் நீங்கள்தான் அடுத்த கேப்டனா என்று என்னிடம் கேட்டனர். இருப்பினும் அந்தப் பதிவு வேறு எதற்காகவாவது இருக்கும் என்று நான் கருதினேன். ஆனால் கடந்த வாரம் வந்த அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக சொன்னார். அவர் கொடுத்த இந்த வேலையை செய்வதற்காக காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை