ஐபிஎல் 2024: சரிவிலிருந்து மீட்ட பதோனி, பூரன்; ஹைதராபாத் அணிக்கு 166 ரன்கள் இலக்கு!
இந்தியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 57ஆவது லீக் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
இதையடுத்து களமிறங்கிய லக்னோ அணிக்கு கேஎல் ராகுல் - குயின்டன் டி காக் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் குயின்டன் டி காக் 2 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அதிரடி வீரர் மார்கஸ் ஸ்டொய்னிஸ் 3 ரன்களிலும் என புவனேஷ்வர் குமாரின் அடுத்தடுத்து ஓவர்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் லக்னோ அணி 21 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் கேஎல் ராகுலுடன் இணைந்த குர்னால் பாண்டியா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார்.
அதன்பின் நிதனமாக விளையாடி வந்த கேப்டன் கேஎல் ராகுல் 29 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 2 சிக்ஸர்களுடன் 24 ரன்களைச் சேர்த்திருந்த குர்னால் பாண்டியாவும் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதனைத்தொடர்ந்து நிக்கோலஸ் பூரன் - ஆயூஷ் பதோனி இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் இணைந்து அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசியதுடன், 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பையும் கடந்தனர். இதில் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசிய ஆயூஷ் பதோனி 28 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.
அவருக்கு துணையாக நிக்கோலஸ் பூரனும் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆயூஷ் பதோனி 9 பவுண்டரிகளுடன் 55 ரன்களையும், நிக்கோலஸ் பூரன் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 48 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்களைச் சேர்த்துள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தரப்பில் புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுகளையும், கேப்டன் பாட் கம்மின்ஸ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதையடுத்து இலக்கை நோக்கி ஹைதராபாத் அணி விளையாடவுள்ளது.