106 மீட்டர் சிக்ஸரை பறக்கவிட்ட நிக்கோலஸ் பூரன்; வைரலாகும் காணொளி!

Updated: Tue, Apr 02 2024 22:16 IST
106 மீட்டர் சிக்ஸரை பறக்கவிட்ட நிக்கோலஸ் பூரன்; வைரலாகும் காணொளி! (Image Source: Google)

இந்தியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் மீதான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்பொட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணியானது 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ரன்களை குவித்தது. 

அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்கள் கேஎல் ராகுல் - குயின்டன் டி காக் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் கேஎல் ராகுல் 20 ரன்களுக்கும், அடுத்து களமிறங்கிய படிக்கல் 6 ரன்களிலும், மார்கஸ் ஸ்டொய்னிஸ் 24 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதேசமயம் மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய குயின்டன் டி காக் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

பின்னர் 8 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 81 ரன்கள் எடுத்த நிலையில் குயின்டன் டி காக்கும் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஆயூஷ் பதோனியும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தனர். இச்சூழலில் களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியதுடன், அடுத்தடுத்து சிக்சர்களை  விளாசி மிரட்டினார். 

அதிலும் ரீஸ் டாப்லி ஓவரில் ஹாட்ரிக் சிக்சர்களை விளாசிய பூரன், அடுத்து வீசிய முகமது சிராஜ் ஓவரில் இரண்டு சிக்சர்களை பறக்கவிட்டார். இதன்மூலம் ஒரு பவுண்டரி 5 சிக்சர்கள் என 40 ரன்களைச் சேர்த்ததன் மூலம், லக்னோ அணி இந்த ஸ்கோரை எட்டியது. இதில் ரீஸ் டப்லி பந்துவீச்சில் நிக்கோலஸ் பூரன் அடித்த சிக்சர் ஒன்று மைதானத்திற்கு வெளியே சென்றது. மேலும் அது 106 மீட்டர் தூரம் சென்றது. 

இதன்மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் அடிக்கப்பட்ட மிக நீளமான சிக்சராக இது பதிவானது. இதற்கு முன்னதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் வெங்கடேஷ் ஐயர், இதே அணிக்கு எதிராக 106 மீட்டர் தூரத்திற்கு சிக்சர் அடித்து அசத்திய நிலையில், தற்போது நிக்கோலஸ் பூரன் அதனைச் சமன்செய்து அசத்தியுள்ளார். இந்நிலையில் நிக்கோலஸ் பூரன் அடித்த இந்த சிக்சர் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ஐபிஎல் 2024 தொடரில் அடிக்கப்பட்ட மிக நீளமான சிக்சர்

  • நிக்கோலஸ் பூரன் (LSG) vs RCB – 106 மீ
  • வெங்கடேஷ் ஐயர்(KKR) vs RCB - 106 மீ
  • இஷான் கிஷன் (MI) vs SRH – 103 மீ
  • ஆண்ட்ரே ரஸ்ஸல் (KKR) vs SRH - 102 மீ
  • அபிஷேக் போரல் (DC) vs PBKS- 99 மீ
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை