கிரிக்கெட்டின் மிகச்சிறந்த ஆட்டமாக இது இருக்கும் - பாட் கம்மின்ஸ்!

Updated: Wed, Apr 10 2024 12:18 IST
கிரிக்கெட்டின் மிகச்சிறந்த ஆட்டமாக இது இருக்கும் - பாட் கம்மின்ஸ்! (Image Source: Google)

பஞ்சாப் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று நடைபெற்றது. சண்டிகரில் நடைபெற்ற இப்போட்டியில்  டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் டிராவிஸ் ஹெட் 22 ரன்களுக்கும், ஐடன் மார்க்ரம் ரன்கள் ஏதுமின்றியும், அபிஷேக் சர்மா 16 ரன்களுக்கும், ராகுல் திரிபாதி, ஹென்ரிச் கிளாசென் போன்ற வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

பின்னர் இணைந்த நிதீஷ் ரெட்டி - அப்துல் சமத் ஆகியோர் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிதீஷ் ரெட்டி தனது முதல் அரைசதத்தைப் பதிவுசெய்ததுடன், 4 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 64 ரன்களைச் சேர்த்தார். பஞ்சாப் கிங்ஸ் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்களில் 29 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அதேசமயம் சாம் கரண் மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோரும் தங்கள் பங்கிற்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களைக் குவித்தது. இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் நட்சத்திர வீரர்கள் ஷிகர் தவான், ஜானி பேர்ஸ்டோவ், பிரப்ஷிம்ரன் சிங், ஜிதேஷ் சர்மா, சாம் கரண், சிக்கந்தர் ரஸா என அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் இணைந்த ஷஷாங்க் சிங் - அஷுதோஷ் சர்மா ஆகியோர் அதிரடியாக விளையாடியதுடன், அணியின் வெற்றிக்காக கடைசிவரை போராடினர். 

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷஷாங்க் சிங் 46 ரன்களையும், அஷுதோஷ் சர்மா 33 ரன்களையும் சேர்த்த நிலையிலும், பஞ்சாப் கிங்ஸ் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்களை மட்டுமே சேர்த்தது. ஹைதராபாத் அணி தரப்பில் புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியின் வெற்றிக்கு காரணமாக இருந்த நிதீஷ் ரெட்டி ஆட்டநாயகன் விருதை வென்றார். 

இந்நிலையில் இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய ஹைதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ்,  “என்னைப் பொறுத்தவரையில் கிரிக்கெட்டின் மிகச்சிறந்த ஆட்டமாக இது இருக்கும். இப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி சிறப்பாக பந்துவீசி தொடங்கினாலும் எங்கள் பேட்டர்கள் 182 ரன்கள் அடித்துவிட்டார்கள். அதையும் நாங்கள் வெற்றி இலக்காக மாற்றி இருக்கிறோம். இம்பாக்ட் வீரரின் சிறப்பே பேட்டிங் வரிசையை இன்னும் ஆழமாக கொண்டு செல்ல முடியும்.

எனவே எப்போது வேண்டுமென்றாலும் ஒரு அணியால் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். இந்த விதிமுறை இருப்பதினால் இனி 150 முதல் 160 ரன்கள் வரை அடிக்கும் பட்சத்தில் பத்தில் ஒன்பது போட்டிகள் தோல்வியை தான் கொடுக்கும். அதே வேளையில் இந்த 180 ரன்களை வைத்து நாங்கள் புதிய பந்தில் சிறப்பாக பந்துவீசினால் நிச்சயம் வெற்றியை நோக்கி செல்ல முடியும் என்று நினைத்தோம்.

புதிய பந்து எப்போதுமே விக்கெட்டை பெற்றுக்கொடுப்பதில் முக்கியம்வாய்ந்தது. புதிய பந்தில் நானும், புவியும் சிறப்பாக பந்துவீசி இரு விக்கெட்டுகளை வீழ்த்தியது திருப்பமாக அமைந்தது. இரு அணிகளிலும் ஏராளமான இடதுகை, வலது பேட்டர்களும், பந்துவீச்சாளர்களும் இருப்பதால் ஆட்டம் கடும் நெருக்கடியாகச் சென்றது. நிதீஷ் குமார் சிறப்பான பங்களிப்பு செய்தார். அவரின் பேட்டிங்கால் தான் நாங்கள் 180 ரன்களை எட்டினோம்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை