சிஎஸ்கே பிளே ஆஃப் வாய்ப்பிற்கு சிக்கலை ஏற்படுத்து பஞ்சாப் கிங்ஸ்; ஐபிஎல் புள்ளிப்பட்டியல்!
சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 62 ரன்களைச் சேர்த்தார். பஞ்சாப் அணி தரப்பில் ஹர்ப்ரீத் பிரார், ராகுல் சஹார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பறினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் பிரப்ஷிம்ரன் சிங் 13 ரன்களில் விக்கெட்டை இழந்தாலும், அதன்பின் இணைந்த ஜானி பேர்ஸ்டோவ் - ரைலீ ரூஸோவ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 17.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கேவை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக ஜானி பேர்ஸ்டோவ் 46 ரன்களையும், ரைலீ ரூஸோவ் 43 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழக்க, ஷஷாங்க் சிங் 25 ரன்களையும், சாம் கரண் 26 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனார். இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்பிரீத் பிரார் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் இத்தோல்வியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளே ஆஃப் வாய்ப்பும் சற்று சிக்கலாக மாறியுள்ளது. அதன்படி இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 5 வெற்றி மற்றும் 5 தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியலின் 4ஆம் இடத்தில் நீடித்து வருகிறது. இதனால் இனிவரும் 4 போட்டிகளில் மூன்றிலாவது சிஎஸ்கே அணி வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
மறுபக்கம் பஞ்சாப் கிங்ஸ் அணி இந்த வெற்றியின் மூலம் தங்களது வாய்ப்பை தக்கவைத்துள்ளது. இத்தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி பெறும் 4ஆவது வெற்றி இதுவாகும் அதன்படி அந்த அணி 10 போட்டிகளில் 4 வெற்றி, 6 தோல்விகள் என 8 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இதனால் இனிவரும் நான்கு போட்டிகளிலும் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றிபெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.