ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : முதலிடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்; பரிதாப நிலையில் மும்பை இந்தியன்ஸ்!

Updated: Tue, Apr 02 2024 13:56 IST
ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : முதலிடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்; பரிதாப நிலையில் மும்பை இந்தியன்ஸ்! (Image Source: Google)

இந்தியாவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களிண் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துவருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 14ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. அதன்படி இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் டிரென்ட் போல்ட் மற்றும் யுஸ்வேந்திர சஹால் ஆகியோரது பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

அதன்படி அணியின் டாப் ஆர்டர் வீரர்களான ரோஹித் சர்மா, நமன் தீர், டெவால்ட் ப்ரீவிஸ் ஆகியார் தாங்கள் எதிர்கொண்ட முதல் பந்திலேயே விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் குறிப்பாக மூவரது விக்கெட்டையும் வீழ்த்தியது வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் தான். அவர்களைத் தொடர்ந்து இஷான் கிஷானும் 16 ரன்களில் பெவிலியன் திரும்பிய, கேப்டன் ஹர்திக் பாண்டியா தனது பங்கிற்கு 34 ரன்களைச் சேர்த்தார்.  அவருக்கு துணையாக விளையாடிய திலக் வர்மாவும் 32 ரன்களில் ஆட்டமிழக்க, மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்களை மட்டுமே சேர்த்தது.

இதையடுத்து எளிய இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது தொடக்கத்தில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேப்டன் சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர் ஆகியோரது விக்கெட்டுகளை இழந்தாலும், ரியான் பராக்கின் அதிரடியான அரைசதத்தின் மூலம் 15.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த ரியான் பராக் 5 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 54 ரன்களைச் சேர்த்து நடப்பு சீசனில் அதிக ரன்களை அடித்த வீரர்களில் விராட் கோலியுடன் சமநிலையில் உள்ளார். 

 

இப்போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நடப்பு ஐபிஎல் சீசனில் அடுத்தடுத்து மூன்று வெற்றிகளைப் பதிவுசெய்ததுடன் 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. இப்பட்டியலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்கு புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் மூன்றாம் இடத்திலும் உள்ளன. மேலும் இப்பட்டியலில் நான்காம் இடத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் நான்கு புள்ளிகளுடன் ரன்ரேட் அடிப்படையில் உள்ளது.

அதேசமயம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் தலா ஒரு வெற்றியுடன் ரன் ரேட் அடிப்படையில் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. இப்பட்டியலில் அடுத்தடுத்து மூன்று தோல்விகளைச் சந்தித்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிகள் ஏதுமின்றி பட்டியலின் கடைசி இடத்தில் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை