ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : தொடர் வெற்றிகளால் முதலிடத்திற்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்!

Updated: Sun, Apr 07 2024 13:37 IST
ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : தொடர் வெற்றிகளால் முதலிடத்திற்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்! (Image Source: Google)

ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியிக் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணிக்கு விராட் கோலி மற்றும் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்ததுடன் முதல் விக்கெட்டிற்கு 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். 

இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் டூ பிளெசிஸ் 44 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல், சௌர்வ் சௌகான் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு தங்களது விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இருப்பினும் இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி ஐபிஎல் தொடரில் தனது 8ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த விராட் கோலி 12 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 113 ரன்களைச் சேர்க்க, 20 ஓவர்கள் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 3 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்களைக் குவித்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய யுஸ்வேந்திர சஹால் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். 

அதன்பின் இணைந்த கேப்டன் சஞ்சு சாம்சன் - ஜோஸ் பட்லர் இணை அதிரடியாக விளையாடியதுடன் இரண்டாவது விக்கெட்டிற்கு 148 ரன்களைச் சேர்த்து அணியின் வெற்றியை உறுதிசெய்தனர். இதில் 8 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 69 ரன்கள் சேர்த்த நிலையில் சஞ்சு சாம்சன் தனது விக்கெட்டை இழக்க, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜோஸ் பட்லர் ஐபிஎல் தொடரில் தனது 6ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 6 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. மேலும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் சதமடித்து அசத்தியதுடன் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த ஜோஸ் பட்லர் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

 

இந்நிலையில் இப்போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் நடப்பு ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடர்ச்சியாக நான்காவது வெற்றியைப் பதிவுசெய்ததுடன், புள்ளிப்பட்டியலில் 8 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது. மேலும் நடப்பு ஐபிஎல் சீசனில் தோல்வியையே தழுவாம் பயணித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் இப்பட்டியலில் கேகேஆர் அணி 6 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 

இப்பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், குஜராத் டைட்டன்ஸ் உள்ளிட்ட அணிகள் தலா நான்கு புள்ளிகளைப் பெற்று ரன் ரேட் அடிப்படையில் அடுத்தடுத்த இடங்களில் நீடித்து வருகிறது. அதேசமயம் ராயல் சேலஞ்சர்ஸ்  பெங்களூரு, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் 8 மற்றும் 9ஆம் இடத்திலும், மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிகள் ஏதுமின்றி 10ஆம் இடத்திலும் தொடர்கின்றன.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை