ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது கேகேஆர்!

Updated: Sat, Mar 30 2024 12:43 IST
Image Source: Google

 

இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துவருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், நடப்பு சீசனின் இரண்டாவது வெற்றியையும் பெற்றது. 

இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் அபார ஆட்டத்தின் மூலமாக 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்களை எடுத்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த விராட் கோலி 4 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 83 ரன்களைச் சேர்த்திருந்தார். அவரைத் தவிர்த்து கேமரூன் க்ரீன் 33 ரன்களை எடுத்தார். 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய கேகேஆர் அணிக்கு பில் சால்ட் - சுனில் நரைன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தைக் கொடுத்தனர். இதனால் முதல் 6  ஓவர்களிலேயே அந்த அணி 85  ரன்களைச் சேர்த்தது. அதன்பின் சுனில் நரைன் 47 ரன்களுக்கும், பில் சால்ட் 30 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய வெங்கடேஷ் ஐயரும் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்ததுடன், 3 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 50 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். 

இருப்பினும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்ததுடன் 2 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 39 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் கேகேஆர் அணி 16.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுனில் நரைன் இப்போட்டிக்கான ஆட்டநாயகன் விருதையும் கைப்பற்றினார். 

இதுவரையில் நடந்த 9 லீக் போட்டியிலும் சொந்த மைதானங்களில் விளையாடிய அணி வெற்றி பெற்றிருந்தது. இந்த டிரெண்டை மாற்றி முதல் முறையாக கேகேஆர் பெங்களூருவில் வெற்றி கண்டுள்ளது. அதோடு, ஆர்சிபி அணிக்கு எதிராக கடைசி 5 போட்டிகளிலும் கேகேஆர் வெற்றி பெற்றிருந்த நிலையில் தற்போது 6ஆவது போட்டியிலும் கேகேஆர் வெற்றி பெற்றுள்ளது. மேலும் இந்த வெற்றியின் மூலம் நடப்பு ஐபிஎல் சீசன் புள்ளிப்பட்டியலில் கேகேஆர் அணி இரண்டாம் இடத்திற்கும் முன்னேறியுள்ளது. 

அதன்படி நடப்பு ஐபிஎல் சீசன் புள்ளிப்பட்டியலில் ரன் ரேட் அடிப்படையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் இடத்தையும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இரண்டாம் இடத்தையும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன. இதில் இந்த மூன்று அணிகளும் நடப்பு ஐபிஎல் சீசனில் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. அதேசமயம் ஆர்சிபி அணி விளையாடிய மூன்று போட்டிகளில் ஒரு வெற்றி, இரண்டு தோல்விகள் என புள்ளிப்பட்டியலின் 6ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை