ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : ஐந்தாம் இடத்திற்கு முன்னேறியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!
இந்தியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் மீதான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்பொட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது 28 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணியானது 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக குயின்டன் டி காக் 81 ரன்களையும், நிக்கோலஸ் பூரன் 40 ரன்களையும் சேர்த்தனர். ஆர்சிபி அணி தரப்பில் கிளென் மேக்ஸ்வெல் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி விளையாடிய ஆர்சிபி அணியில் விராட் கோலி 20 ரன்களுக்கும், ஃபாஃப் டூ பிளெசிஸ் 19 ரன்களுக்கு, ராஜத் பட்டிதார் 29 ரன்களுக்கும், மஹிபால் லாம்ரோர் 33 ரன்களையும் சேர்த்ததை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் சோபிக்க தவறினர். இதனால் 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. லக்னோ அணி தரப்பில் மயங்க் யாதவ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
இந்நிலையில் இப்போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நடப்பு ஐபிஎல் சீசனில் தங்களது இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்ததுடன், ரன் ரேட் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் ஐந்தாம் இடத்திற்கும் முன்னேறி அசத்தியுள்ளது. அதேசமயம் இப்போட்டியில் ஏற்பட்ட தோல்வியின் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 9ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
மேலும் இப்பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலிடத்திலும், கொல்க்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இரண்டாம் இடத்திலும் உள்ளனர். ரன் ரேட் அடிப்படையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது புள்ளிப்பட்டியலில் மூன்றாம் இடத்தில் நீடித்து வருகிறது. அதேபோல் நடப்பு சீசனில் ஒரு வெற்றியைகூட பெறாத மும்பை இந்தியன்ஸ் அணியானது பட்டியலின் கடைசி இடத்தில் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.