ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : நான்காம் இடத்திற்கு முன்னேறியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

Updated: Fri, May 03 2024 15:45 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் நேற்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற 50ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தியது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 201 ரன்களைச் சேர்த்தது. இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த நிதிஷ் ரெட்டி 76 ரன்களையும், ஹென்ரிச் கிளாசென் 42 ரன்களையும் சேர்த்தனர். ராஜஸ்தான் அணி தரப்பில் ஆவேஷ் கான் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு தொடக்கமே சொதப்பாலாக அமைந்தது. அணியின் நட்சத்திர வீர்ர்கள் ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் ஆகியோர் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தனர். இதனையடுத்து ஜெய்ஸ்வால் - ரியான் பராக் ஜோடி பொறுப்புடன் விளையாடினர். இருவரும் அரை சதம் விளாசி அசத்தினர். இதில் ஜெய்ஸ்வால் 67 ரன்களையும், ரியான் பராக் 77 ரன்களையும் சேர்த்து தங்களது விக்கெட்டை இழந்தார். அதனை தொடர்ந்து களமிறங்கிய ஹெட்மையர் 13 ரன்னிலும், துருவ் ஜூரெல் ஒரு ரன்னிலும் என வெளியேறி அதிர்ச்சியளித்தனர். 

இதனால் கடைசி ஓவரில் ராஜஸ்தான் அணி வெற்றிக்கு 13 ரன்கள் தேவை என்ற நிலையில், கடைசி ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். முதல் பந்தை அஸ்வின் 1 ரன் எடுத்தார். 2-வது பந்தை பவல் 2 ரன்கள் எடுத்தார். 3-வது பந்தை பவுண்டரி விரட்டினார் பவல். இதனால் கடைசி 3 பந்தில் ராஜஸ்தானுக்கு 6 ரன்கள் மட்டுமே தேவைபட்டது. அடுத்த பந்தில் பீல்டிங்கின் தவறால் 2 ரன்கள் எடுக்கப்பட்டது. பரபரப்பான கட்டத்தில் 5ஆவது பந்தும் 2 ரன்கள் எடுக்கப்பட்டது. இதனால் கடைசி பந்தில் 2 ரன்கள் தேவை என்ற நிலையில் சிறப்பாக பந்து வீசிய புவனேஸ்வர் குமார் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. 

 

இந்நிலையில் இப்போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4ஆம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. அதன்படி இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி 6 வெற்றி, 4 தோல்விகளுடன் 12 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இந்த பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 16 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகள் 12 புள்ளிகளைப் பெற்று இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தில் நீடித்து வருகின்றனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை