ஐபிஎல் 2024: புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் கண்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 18ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீழ்த்தி, நடப்பு ஐபிஎல் தொடரில் தங்களது இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
அதன்படி இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதையடுத்து இலக்கை துரத்திய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், ஐடன் மார்க்ரம் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தின் மூலம் 18.1 ஓவர்களில் இலக்கை எட்டி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அபிஷேக் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார். மேலும் இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நடப்பு ஐபிஎல் சீசனில் இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. இதன்மூலம் ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் 5ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
அதேசமயம் தோல்வியைச் சந்தித்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 4 புள்ளிகளில் இருந்தாலும் ரன் ரேட் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து மூன்றாம் இடத்தில் நீடித்து வருகிறது. இப்பட்டியலில் இதுவரை தோல்வியையே சந்திக்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தலா 6 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிரண்டு இடங்களைத் தக்கவைத்துள்ளன.
அதேசமயம் ஐபிஎல் தொடரில் அதிக ரசிகர் பட்டாளங்களை கொண்டுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8ஆம் இடத்திலும், ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 9ஆம் இடத்திலும், ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்த மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு சீசனில் இதுவரை ஒரு வெற்றியைக் கூட பெறாமல் பட்டியலின் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.