ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனானது இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 65ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ரயால்ஸ் அணியை எதிர்பார்த்து பஞ்சாப் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. கௌகாத்தில் உள்ள பர்சபர கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து பஞ்சாப் கிங்ஸ் அணியை பந்துவீச அழைத்தார். அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால், அறிமுக வீரர் டாம் கொஹ்லர் காட்மோர் இணை தொடக்கம் கொடுத்தனர்.

Advertisement

இதில் பவுண்டரியுடன் இன்னிங்ஸைத் தொடங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்திருந்த நிலையில் 4 ரன்களில் விக்கெட்டை இழந்து ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தார். அதன்பின் காட்மோருடன் இணைந்த கேப்டன் சஞ்சு சாம்சன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 36 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் 18 ரன்களில் சஞ்சு சாம்சன் தனது விக்கெட்டை இழந்து அதிர்ச்சி கொடுத்தார். 

Advertisement

அவரைத்தொடர்ந்து தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டாம் கொஹ்லர் காட்மோரும் 18 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, ராஜஸ்தான் அணி 42 ரன்களுக்கே மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் இணைந்த ரியான் பராக் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் இணை பொறுப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியதுடன் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். அதன்பின் அஸ்வின் 28 ரன்களுக்கும், அடுத்து களமிறங்கிய துருவ் ஜூரெல் ரன்கள் ஏதுமின்றியும், ரோவ்மன் பாவெல் 4 ரன்களிலும், டொனவன் ஃபெரீரா 7 ரன்களிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். 

அதன்பின் இப்போட்டியில் இறுதிவரை போராடிய ரியான் பராக் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 6 பவுண்டரிகளுடன் 48 ரன்களை மட்டுமே எடுத்து விக்கெட்டை இழந்ததுடன், அரைசதம் அடிக்கும் வாய்ப்பையும் தறவிட்டார். இறுதியில் டிரெண்ட் போல்ட் இரண்டு பவுண்டரிகளுடன் 12 ரன்களைச் சேர்த்து ரன் அவுட்டானர். இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 144 ரன்களை மட்டுமே சேர்த்தது. பஞ்சாப் அணி தரப்பில் சாம் கரண், ராகுல் சஹார், ஹர்ஷல் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இதனைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஜானி பேர்ஸ்டோவ் - பிரப்ஷிம்ரன் சிங் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் 6 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பிரப்ஷிம்ரன் சிங் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ரைலீ ரூஸோவ் களமிறங்கிய முதல் பந்திலிருந்தே அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த ரைலீ ரூஸோவ் 5 பவுண்டரிகளுடன் 23 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த நம்பிக்கை நட்சத்திரம் ஷஷாங்க் சிங் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து ஆவேஷ் கான் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். 

அவர்களைத்தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜானி பேர்ஸ்டோவும் 14 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பஞ்சாப் கிங்ஸ் அணி 48 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் சாம் கரண் - ஜித்தேஷ் சர்மா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். ஒருகட்டத்திற்கு மேல் அதிரடியாக விளையாடிய ஜித்தேஷ் சர்மா 22 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தாலும், மறுபக்கம் நிதானமாக விளையாடி வந்த சாம் கரண் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து நம்பிக்கை கொடுத்தார். 

Advertisement

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் சாம் கரண் 5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 63 ரன்களையும், அவருக்கு துணையாக விளையாடிய அஷுதோஷ் சர்மா ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 16 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 18.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த தோல்வியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடர்ச்சியாக தங்களது 4ஆவது தோல்வியைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News