ஐபிஎல் 2024: நிதீஷ் ரெட்டி அரைசதத்தால் தப்பிய சன்ரைசர்ஸ்; பஞ்சாப் கிங்ஸிற்கு 183 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெற்ற 23ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சண்டிகரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷிகர் தவான் முதலில் பந்துவீசுவதென அறிவித்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். இதையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு அதிரடி தொடக்க வீரர்கள் டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் முதல் சில ஓவர்களில் இருவரும் நிதானம் காட்டினர். அதன்பின் அதிரடியாக விளையாட முயற்சித்த டிராவிஸ் ஹெட் 4 பவுண்டரிகளுடன் 21 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து கடந்த போட்டியில் அரைசதம் கடந்து அசத்திய ஐடன் மார்க்ரம் ரன்கள் ஏதுமின்றி அதே ஓவரில் அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின்னர் அபிஷேக் சர்மா 16 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பவர்பிளே ஓவர்களுக்குள்ளாகவே மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதன்பின் இணைந்த நிதீஷ் ரெட்டி மற்றும் இம்பேக்ட் பிளேயராக களமிறங்கிய ராகுல் திரிபாதி இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். பின் 11 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ராகுல் திரிபாதி தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அதிரடி வீரரும் அணியின் நம்பிக்கை நட்சத்திமும் ஆன ஹென்ரிச் கிளாசென் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். இதனையடுத்து இணைந்த் நிதீஷ் ரெட்டி - அப்துல் ஷமாத் இணை தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிதீஷ் ரெட்டி டி20 கிரிக்கெட்டில் தனது முதல் அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இருவரும் தொடர்ந்து அதிரடியாக விளையாடியதுடன் 19 பந்துகளிலேயே 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். பின் 5 பவுண்டரிகளுடன் 25 ரன்களை எடுத்திருந்த அப்துல் சமத் தனது விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 4 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 64 ரன்களை எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் இறுதிதியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷபாஸ் அஹ்மத் அணிக்கு தேவையான ரன்களைச் சேர்த்தார்.
இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷபாஸ் அஹ்மத் ஒருபவுண்டரி, ஒரு சிக்சர் என 14 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களைச் சேர்த்தது. பஞ்சாப் கிங்ஸ் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகளையும், ஹர்ஷல் படேல், சாம் கரண் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி பஞ்சாப் கிங்ஸ் அணி இன்னிங்ஸைத் தொடரவுள்ளது.