ஐபிஎல் 2024: லக்னோவை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கியது ராஜஸ்தான்!

Updated: Sun, Mar 24 2024 19:33 IST
ஐபிஎல் 2024: லக்னோவை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கியது ராஜஸ்தான்! (Image Source: Google)

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதில் இன்று நடைபெற்ற 4ஆவது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராய்ல்ஸ் அணியை எதிர்த்து கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்ப்ர ஜெயண்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு ஜோஸ் பட்லர் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் ஜோஸ் பட்லர் 11 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 24 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். பின்னர் இணைந்த கேப்டன் சஞ்சு சாம்சன் - ரியான் பராக் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.

இதில் தொடர்ந்து பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாசிய சஞ்சு சாம்சன் ஐபிஎல் தொடரில் தனது 42ஆவது அரைசதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். அதேசமயம் மறுபக்கம் அரைசதத்தை நெருங்கிக்கொண்டிருந்த ரியான் பராக் ஒரு பவுண்டரி, 3 சிச்கர்கள் என 43 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.  அதனைத்தொடர்ந்து களமிறங்கிய ஷிம்ரான் ஹெட்மையர் வெறும் 5 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.

பின்னர் சஞ்சு சாம்சனுடன் இணைந்த துருவ் ஜுரெலும் தனது பங்கிற்கு ஒருசில பவுண்டரிகளைச் சேர்த்தார். அதேசமயம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 3 பவுண்டரி, 6 சிக்சர்கள் 82 ரன்களையும், துருவு ஜுரெல் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் என 20 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 193 ரன்களைக் குவித்தது. லக்னோ அணி தரப்பில் நவீன் உல் ஹக் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனையடுத்து 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு கேஎல் ராகுல் - குயின்டன் டி காக் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டி காக் 4 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய தேவ்தத் படிக்கல், ஆயுஷ் பதோனி ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். 

பின்னர் கேஎல் ராகுலுடன் இணைந்த தீபக் ஹூடாவும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். தொடர்ந்து அதிரடி காட்டிய தீபக் ஹூடா 2 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 26 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் கேப்டனுடன் இணைந்த துணைக்கேப்டன் நிக்கோலஸ் பூரனும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். 

பின் 4 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 58 ரன்களுக்கு கேஎல் ராகுல் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய மார்கஸ் ஸ்டொய்னிஸும் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். அதேசமயம் இறுதிவரை போராடிய நிக்கோலஸ் பூரன் 4 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 64 ரன்களைச் சேர்த்த போது லக்னோ அணியால் இலக்கை எட்டமுடியவில்லை. இதனால் 20 ஓவர்கள் முடிவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்களை மட்டுமே சேர்த்தது. 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய டிரெண்ட் போல்ட் 2 விக்கெட்டுகளையும், நந்த்ரே பர்கர், அஸ்வின், சஹால், சந்தீப் சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தியதுடன், நடப்பு சீசனையும் வெற்றியுடன் தொடங்கியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை