அந்தரத்தில் பறந்தவாறு கேட்ச் பிடித்த ரவி பிஷ்னோய்- வைரல் காணொளி!

Updated: Mon, Apr 08 2024 15:16 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நட்சத்தின. ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் மட்டுமே எடுத்தது. லக்னோ அணி தரப்பில் அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டொய்னிஸ் 58 ரன்கள் எடுத்தார். குஜராத் அணி தரப்பில் உமேஷ் யாதவ், தர்ஷன் நல்கண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதையடுத்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டன் ஷுப்மன் கில் - சாய் சுதர்ஷன் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். ஆனால் அணிக்கு தேவையான தொடக்கம் கிடைத்தும் அதை பயன்படுத்த தவறிய குஜராத் அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 130 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய யாஷ் தாக்கூர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவியதன் மூலம், இப்போட்டியின் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் இப்போட்டியின் போது லக்னோ அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் பிடித்த கேட்ச் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி உள்ளது. 

அதன்படி நேற்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி ஒரு விக்கெட்டை இழந்து தடுமாறிய போது, நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் பேட்டிங் செய்ய களமிறங்கினார். தொடக்கத்திலிருந்தே பந்தை எதிர்கொள்ள தடுமாறி வந்த அவர் நான்கு பந்துகளில் ஒரு ரன்னை மட்டுமே எடுத்திருந்தார். அச்சமயத்தில் இன்னிங்ஸின் எட்டாவது ஓவரை ரவி பிஷ்னோய் வீச, அந்த ஓவரின் இரண்டாவது பந்தை கேன் வில்லியம்சன் தடுத்து விளையாட முயற்சித்தார்.

 

ஆனால் அவர் எதிர்பார்த்த வேகத்தை விட பந்து வந்தால் அதனை தடுக்கும் முயற்சியில் பந்தை நேரடியாக பந்துவீச்சாளரை நோக்கி அடித்தார். அப்போது அதனை சூதாரித்த ரவி பிஷ்னோய் யாரும் எதிர்பார்க்காத வகையில் தாவி பந்தை பிடித்ததுடன், ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்த கேன் வில்லியம்சனின் விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினார். இந்நிலையில் இக்காணொளியானது இணையத்தில் வைரலாகியது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை