இங்கு எப்படி விளையாடுவது என்பது எங்களுக்கு நன்றாக தெரியும் - ரவீந்திர ஜடேஜா!

Updated: Tue, Apr 09 2024 14:07 IST
இங்கு எப்படி விளையாடுவது என்பது எங்களுக்கு நன்றாக தெரியும் - ரவீந்திர ஜடேஜா! (Image Source: Google)

இந்தியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து இலக்கை துரத்தி விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 17.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிஎஸ்கே வீரர் ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகன் விருதை வென்றார். 

ஆட்டநாயகன் விருது பெற்ற பின் பேசிய ரவீந்திர ஜடேஜா, “எப்போதுமே எனக்கு இதுபோன்ற மைதானத்தில் பந்து வீசுவது எனக்கு மிகவும் பிடிக்கும். இங்கு வந்து விளையாடும் அணிக்கு இரண்டு அல்லது மூன்று நாள்கள் தான் இடைவெளி இருக்கும். அந்த இரண்டு நாள்களில் சேப்பாக்கம் ஆடுகளத்தைப் பார்த்து அதற்குத் தகுந்தாற்போல் திட்டத்தை வகுப்பது என்பது மிகவும் சிரமமான விஷயம். ஆனால் இது எங்களுடைய சொந்த மைதானம் என்பதால் இங்கு எப்படி விளையாடுவது என்பது எங்களுக்கு நன்றாக தெரியும்” என்று தெரிவித்துள்ளார். 

 

மேலும் இப்போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்றதன் மூலம் சிஎஸ்கே அணிக்காக ரவீந்திர ஜடேஜா 15ஆவது முறையாக ஆட்டநாயகன் விருதை வென்றார். இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரா சிங் தோனி 15 முறை ஆட்டநாயகன் விருதை வென்றதே சாதனையாக இருந்த நிலையில், தற்போது அதனை ரவீந்திர ஜடேஜா சமன்செய்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை