முதல் ஓவரிலேயே ஆட்டத்தின் போக்கை மாற்றிய ஸ்டப்ஸ் - வைரலாகும் காணொளி!
குஜராத் டைட்டன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி இன்று அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணியானது எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததுடன், 17.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ரஷித் கான் 31 ரன்களைச் சேர்த்தார். டெல்லி அணி தரப்பில் முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தார். இதில் மெக்குர்க் 20, பிரித்வி ஷா 7, அபிஷேக் போரெல் 15, ஷாய் ஹோப் 19 ரன்களைச் சேர்த்து விக்கெட்டுகளை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் ரிஷப் பந்த் 16 ரன்களையும், சுமித் குமார் 9 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 8.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
இந்நிலையில் இப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் அதிரடி வீரர் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் யாரும் எதிர்பார்க்காத வகையில் பந்துவீச்சில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டத்தின் போக்கை முற்றிலுமாக மாற்றினார். அதன்படி இன்னிங்ஸின் 9ஆவது ஓவரை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தரப்பில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசியனார். அப்போது 47 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து குஜராத் அணி தடுமாறி வந்த நிலையில், 8 ரன்கள் எடுத்திருந்த அபினவ் மனோகர் பந்தை அடிக்க முயன்று தவறவிட்டதுடன், க்ரீஸை விட்டும் விலகி இருந்தார்.
இதனை சரியாக கவனித்த ரிஷப் பந்த் பந்தை பிடித்து ஸ்டம்பிங் செய்து அசத்தினார். அதன்பின் அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் குஜராத் டைட்டன்ஸ் அணி ஷாருக்கானை இம்பேக் பிளேயராக களமிறங்கியது. அதன்படி களமிறங்கிய ஷாருக் கான் சந்தித்த இரண்டாவது பந்தை அடிக்க முயற்சிக்க, அதனை சூதாரித்த ஸ்டப்ஸும் பந்தை வைடாக வீசினார். இதனால் சற்று தடுமாறிய ஷாருக் கான் பந்தை தவறவிட, அதனை ரிஷப் பந்தும் ஸ்டம்பிங் செய்யும் முயற்சியில் பந்தை தவறவிட்டார். இருப்பினும் பந்து ரிஷப்பின் கைகளில் பட்டி ஸ்டம்புகளை தகர்த்தது.
இதனால் ஷாருக் கான் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து குஜராத் அணி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். மேலும் இந்த இன்னிங்ஸில் ஒரு ஓவரை மட்டுமே வீசிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 11 ரன்களைக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியதுடன், குஜராத் அணியையும் அழுத்தத்தில் ஆழ்த்தினார். இந்நிலையில் தனது முதல் ஓவரிலேயே டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளி வைரலாகி வருகிறது.