ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது ராஜஸ்தான் ராயல்ஸ்!

Updated: Mon, Apr 01 2024 23:02 IST
Image Source: Google

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 14ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இதையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் தொடர்க்க வீரர்களாக களமிறங்கினர். 

இதில் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா முதல் பந்திலேயே தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்ப, அடுத்து களமிறங்கிய இளம் அதிரடி வீரர் நமன் திர்ரும் முதல் பந்திலேயே டிரென்ட் போல்டிடம் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் களமிறங்கிய நட்சத்திர வீரர் டேவால்ட் ப்ரீவிஸும் தனது முதல் பந்தில் ஆட்டமிழந்து டிரென்ட் போல்டிடம் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து அதிரடியான ஆட்ட அனுகுமுறையில் விளையாடி வந்த இஷான் கிஷான் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் என 16 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 

இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் இணைந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் திலக் வர்மா இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன், விக்கெட் இழப்பையும் தடுத்து நிறுத்தினர். இதில் தொடர்ந்து இருவரும் பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசித் தள்ள மும்பை அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. இதில் இருவரும் இணைந்து 5ஆவது விக்கெட்டிற்கு பார்ட்னர்ஷிப் முறையில் 56 ரன்களை எடுத்த நிலையில், அதிரடியாக விளையாடி வந்த ஹர்திக் பாண்டியா 34 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார். 

அதன்பின் களமிறங்கிய பியூஷ் சாவ்லா 3 ரன்களில் நடையைக் கட்ட, அதனைத்தொடர்ந்து அணியின் நம்பிக்கையாக பார்க்கப்பட்டு வந்த திலக் வர்மாவும் 2 சிக்சர்களுடன் 32 ரன்களை எடுத்த நிலையில் யுஸ்வேந்திர சஹால் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய டிம் டேவிட்டும் 17 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்களை மட்டுமே எடுத்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தரப்பில் டிரென்ட் போல்ட் மற்றும் யுஸ்வேந்திர சஹால் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ஜோஸ் பட்லர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை அடித்து 10 ரன்களை எடுத்த நிலையில் முதல் ஓவரின் கடைசி பந்தில் தனது விக்கெட்டை இழந்து மீண்டும் ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் மூன்று பவுண்டரிகளை விளாசிய நிலையில் ஆகாஷ் மத்வால் பந்துவீச்சில் இரண்டாவது பந்திலேயே விக்கெட்டை இழந்தார். 

அவரைத் தொடர்ந்து அதிரடி தொடக்க வீரர் ஜோஸ் பட்லரும் 13 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆகாஷ் மத்வால் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 48 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த ரியான் பராக் - ரவிச்சந்திரன் அஸ்வின் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், சீரான வேகத்தில் அணியின் ஸ்கோரையும் உயர்த்தி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். பின் 16 ரன்கள் எடுத்திருந்த ரவிச்சந்திரன் அஸ்வினும் ஆகாஷ் மத்வால் பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். 

அதேசமயம் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியான் பராக் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ததுடன், 5 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 54 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 15.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. அதேசமயம் இப்போட்டியில் தோல்வியைச் சந்தித்ததன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு ஐபிஎல் சீசனில் ஹாட்ரிக் தோல்வியைத் தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை