ஸ்லோ ஓவர் ரேட்; சஞ்சு சாம்சனுக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!

Updated: Thu, Apr 11 2024 13:18 IST
Image Source: Google

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கி நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற 24ஆவது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீசட்சை நடத்தினன. 

இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்களைக் குவித்தது. இதில் அதிகபட்சமாக ரியான் பராக் 76 ரன்களையும், கேப்டன் சஞ்சு சாம்சன் 68 ரன்களையும் சேர்த்தனர். இதையடுத்து விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஷுப்மன் கில் -  சாய் சுதர்ஷன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். 

இதில் சாய் சுதர்ஷன் 35 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாடிய ஷுப்மன் கில் அரைசதம் கடந்ததுடன் 72 ரன்களைச் சேர்த்தார். ஆனால் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். இதனால் குஜராத் அணி வெற்றிக்கு கடைசி 2 ஓவர்களில் 35 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. அதன்படி இன்னிங்ஸின் 19ஆவது ஓவரை வீசிய குல்தீப் சென், இரண்டு வைட், ஒரு நோ-பால் என மொத்தமாக 20 ரன்களை வாரி வழங்கினார். 

மேலும் அந்த ஓவரில் அவர் கூடுதல் பந்துகளை வீசியதன் காரணமாக ராஜஸ்தான் அணி குறிப்பிட்ட நேரத்தை தாண்டி 20ஆவது ஓவரை வீசியது. இதன் காரணமாக அந்த அணி கடைசி ஓவரில் 4 ஃபீல்டர்களை மட்டுமே பவுண்டரி எல்லையில் நிற்க அனுமதிக்கப்பட்டது. இதனால் கடைசி ஓவரில் 15 ரன்கள் என்ற இலக்கை ரஷித் கான் மற்றும் ராகுல் திவேத்தியா இணை எட்டி, குஜராத் டைட்டன்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்தனர்.

இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குறிப்பிட்ட நேரத்தை தாண்டி பந்துவீசியதன் காரணமாக அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் நடப்பு சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்ட முதல் போட்டியாகவும் இது அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை