தனது அறிமுக போட்டியில் மோசமான சாதனை படைத்த ஷமார் ஜோசப்!

Updated: Sun, Apr 14 2024 19:59 IST
Image Source: Google

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி இன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 161 ர்ன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 45 ரன்களையும், கேப்டன் கேஎல் ராகுல் 39 ரன்களையும் சேர்த்தனர். கொல்கத்தா அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் அதிரடி வீரர்கள் சுனில் நரைன், அங்கிரிஷ் ரகுவன்ஷி ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். ஆனால் அதன்பின் ஜோடி சேர்ந்த பில் சால்ட் மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன், இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். இதில் அதிரடியாக விளையாடிய பில் சால்ட் தனது அரைசதத்தையும் பதிவுசெய்தார். 

இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பில் சால்ட் 14 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 89 ரன்களையும், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 6 பவுண்டரிகளுடன் 38 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 15.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இப்போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த பில் சால்ட் ஆட்ட்நாயகன் விருதை வென்றார்.

இந்நிலையில் இப்போட்டியின் மூலம் ஐபிஎல் தொடரில் அறிமுகமான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷமார் ஜோசப் மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதன்படி இன்னிங்ஸின் முதல் ஓவரை வீசிய அவர், அந்த ஓவரில் வைட், நோ-பால் உள்பட மொத்தமாக 10 பந்துகளை வீசி 22 ரன்களைக் கொடுத்தார். இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் இன்னிங்ஸில் தனது முதல் ஓவரில் அதிக பந்துகளை வீசிய பந்துவீச்சாளர் எனும் சாதனையை ஷமார் ஜோசப் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை