யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசிய ஷிவம் தூபே - காணொளி!
சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து சிஎஸ்கே அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய சிஎஸ்கே அணியில் அஜிங்கியா ரஹான் ஒரு ரன்னிலும், டேரில் மிட்செல் 11 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர்.
அதன்பின் களமிறங்கிய ரவீந்திர ஜடேஜாவும் 16 ரன்களோடு பெவிலியன் திரும்பினார். இதையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் - ஷிவம் தூபே இணை அதிரடியாக விளையாடி பவுண்டரியும், சிக்ஸர்களையும் விளாசித்தள்ளினர். இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் கெய்க்வாட் ஐபிஎல் தொடரில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவுசெய்து மிராட்டினார்.
அவருக்கு துணையாக விளையாடி வந்த ஷிவம் தூபே 66 ரன்கள் சேர்த்த நிலையில் ரன் அவுட்டாக, இறுதியில் மகேந்திர சிங் தோனி பவுண்டரி அடித்து இன்னிங்ஸை ஃபினிஷ் செய்தார். இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்களைக் குவித்தது. இதில் அதிகபட்சமக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 108 ரன்களைச் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்நிலையில் இப்போட்டியின் போது ஷிவம் தூபே ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசினார். அதன்படி, இன்னிங்ஸின் 16ஆவது ஓவரை லக்னோ அணி தரப்பில் யாஷ் தாக்கூர் வீச அந்த ஓவரில் ஷிவம் தூபே அடுத்தடுத்து மூன்று சிக்ஸர்களை விளாசித் தள்ளினார். வழக்கமாக சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக மட்டும் அதிரடியாக விளையாடி வந்த ஷிவம் தூபே இன்றைய போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராகவும் அபாரமாக செயல்பட்டது ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.