ஐபிஎல் 2024: இறுதிவரை போராடிய தினேஷ் கார்த்திக்; ஆர்சிபியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அபார வெற்றி!

Updated: Mon, Apr 15 2024 23:16 IST
ஐபிஎல் 2024: இறுதிவரை போராடிய தினேஷ் கார்த்திக்; ஆர்சிபியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அபார வெற்றி (Image Source: Google)

17ஆவது சீசன் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 30ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து எஸ்ஆர்எச் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இதையடுத்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். 

இதில் தொடக்கம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டிராவிஸ் ஹெட் அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்ஸர்களையும் விளாசித்தள்ளினார். இதனால் 20 பந்துகளிலேயே தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.  இதன்மூலம் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 108 ரன்கள் சேர்த்த நிலையில், 2 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 34 ரன்களைச் சேர்த்திருந்த அபிஷேக் சர்மா தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து மற்றொரு அதிரடி நாயகன் ஹென்ரிச் கிளாசென் இப்போட்டியில் மூன்றாம் வரிசையில் களமிறங்கினார்.

மறுபக்கம் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த டிராவிஸ் ஹெட் 39 பந்துகளில் தனது சதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். பின் 9 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் என 102 ரன்கள் எடுத்த நிலையில் டிரேவிஸ் ஹெட் ஆட்டமிழக்க, அவர் விட்டுச்சென்ற இடத்தை நிரப்பும் விதமாக ஹென்ரிச் கிளாசென் சிக்ஸர் மழை பொழிந்து 23 பந்துகளில் தனது அரைசதத்தை எட்டினார். அதன்பின் 2 பவுண்டரி, 7 சிக்ஸர்களை விளாசி 67 ரன்கள் எடுத்திருந்த ஹென்ரிச் கிளாசெனும் தனது விக்கெட்டை இழந்தார்.அதன் பின்னர் மார்க்ரமுடன் இணைந்த அப்துல் சமதும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார். 

இதில் இருவரும் மாறிமாறி பவுண்டரிகளை விளாச சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிகபட்ச ரன்களை குவித்த அணி என்ற தங்களுடைய சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்தது. இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்களைக் குவித்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அப்துல் சமத் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 37 ரன்களையும், ஐடன் மார்க்ரம் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 32 ரன்களையும் சேர்த்தனர். ஆர்சிபி தரப்பில் லோக்கி ஃபர்குசன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதையடுத்து 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் - விராட் கோலி இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இருவரும் அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்ஸர்களையும் விளாச, இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியும் முதல் 6 ஓவர்களில் 79 ரன்களைக் குவித்தது. அதன்பின் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த விராட் கோலி 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 42 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுமுனையில் சிறப்பாக விளையாடிய ஃபாஃப் டு பிளெசிஸ் 23 பந்துகளில் அரைசதம் கடந்தார். 

இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வில் ஜேக்ஸ் 7 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் எதிர்பாராதவிதமாக ரன் அவுட்டாகினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கி அதிரடி காட்டிய ராஜத் பட்டிதார் 9 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் 7 பவுண்டரி 4 சிக்ஸர்கள் என 62 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய சௌரவ் சௌகான் ரன்கள் ஏதுமின்றியும், 2 சிக்ஸர்களுடன் 19 ரன்களைச் சேர்த்திருந்த மஹிபால் லாம்ரோர் ஆகியோரும் பாட் கம்மின்ஸ் பந்துவீச்சில் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். 

ஆனாலும் இப்போட்டியில் 6ஆவது விக்கெட்டாக களமிறங்கிய தினேஷ் கார்த்திக் சற்றும் மனம் தளராமல் அதிரடியாக விளையாடி, பவுண்டரியும், சிக்ஸர்களையும் விளாசியதுடன் 23 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். மேலும் தொடர்ந்து போராடிய தினேஷ் கார்த்திக் ஒவ்வொரு ஓவரிலும் சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் விளாச ஆர்சிபி அணி ரசிகர்களுக்கும் சற்று நிம்மதி கிடைத்தது. இப்போட்டியில் இறுதிவரை களத்தில் இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட தினேஷ் கார்த்திக் 5 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் என 83 ரன்களைக் குவித்து தனது விக்கெட்டை இழந்தார். 

இதனால் ஆர்சிபி அணியின் தோல்வியும் உறுதியானது. பின் கடைசி ஓவர்களில் அந்த அணி வெற்றிக்கு 44 ரன்கள் தேவை என்ற நிலைக்கு தள்ளப்பட்டது. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்களை மட்டுமே எடுத்தது. சன்ரைசர்ஸ் அணி தரப்பில் கேப்டன் பாட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெயதது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை