ஐபிஎல் 2024: வரலாற்று சாதனையுடன் மேலும் சில சாதனைகளை குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி ரசிகர்களுக்கு ராஜவிருந்து என்றே தான் சொல்ல வேண்டும். ஏனெனில் இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 287 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை பதிவுசெய்தது.
அதன்படி இப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்கள் டிராவிஸ் ஹெட் 9 பவுண்டரி, 8 சிக்ஸர்களுடன் 102 ரன்களையும், ஹென்ரிச் கிளாசென் 2 பவுண்டரி, 7 சிக்ஸர்களுடன் 67 ரன்களையும், அப்துல் சமாத் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 37 ரன்களையும், அபிஷேக் சர்மா 34 ரன்களையும், ஐடன் மார்க்ரம் 32 ரன்களையும் என களமிறங்கிய அனைத்து வீரர்களும் சுமார் 150 ஸ்டிரைக் ரேட்டிற்கு மேல் விளாசி தள்ளினர்.
இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக ரன்களை குவித்த அணி எனும் தன்னுடைய சாதனையை தனே முறியடித்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. அதேசமயம் இப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தரப்பில் பந்துவீசிய மஹிபால் லாம்ரோர் மற்றும் வில் ஜேக்ஸ் ஆகியோரைத் தவிர்த்து மற்ற அனைத்து வீரர்களும் 50 ரன்களுக்கு மேல் ரன்களை வாரி வழங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை அடித்த அணி
இந்நிலையில் இப்போட்டியில் பதிவுசெய்யப்பட்ட சில சாதனைகள் குறித்து இப்பதிவில் பார்ப்போம். அதன்படி இப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 287 ரன்களை குவித்து ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிகபட்ச ரன்களை சேர்த்த அணி எனும் சாதனையை படைத்துள்ளது. முன்னதாக இதே சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 277 ரன்களை சேர்த்ததே சாதனையாக இருந்தது.
- 287/3 - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ஆர்சிபி, பெங்களூரு, 2024
- 277/3 - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs மும்பை இந்தியன்ஸ், ஹைதராபாத் 2024
- 272/7 - கேகேஆர் vs டெல்லி கேப்பிட்டல்ஸ், விசாகப்பட்டினம், 2024
- 263/5 - ஆர்சிபி vs புனே வாரியர்ஸ், பெங்களூரு, 2013
- 257/7 - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ், மொஹாலி, 2023
டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை அடித்த அணிகள்
மேலும் டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிகப்பட்ட இரண்டாவது அதிகபட்ச் ஸ்கோராக இது பதிவானது. முன்னதாக கடந்தாண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் மங்கோலியா அணிக்கு எதிராக நேபாள் அணி 314 ரன்களை குவித்ததே இதுநாள் வரை சாதனையாக இருந்து வருகிறது. இதையடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி குவித்த 287 ரன்கள் இரண்டாம் இடத்தில் உள்ளது.
- 314/3 - நேபாளம் vs மங்கோலியா, ஹாங்சூ 2023
- 287/3 - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ஆர்சிபி, பெங்களூரு, 2024
- 278/3 - ஆஃப்கானிஸ்தான் vs அயர்லாந்தும், டெராடூன், 2019
- 278/4 - செக் குடியரவு vs துருக்கி, 2019
- 277/3 - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs மும்பை இந்தியன்ஸ், ஹைதராபாத், 2024
ஐபிஎல் தொடர் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்களை அடித்த அணி
அத்போல் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியைச் சேர்ந்த வீரர்களை சிக்ஸர் மழை பொழிந்தனர். அதிலும் டிராவிஸ் ஹெட் 8 சிக்ஸர்களையும், ஹென்ரிச் கிளாசென் 7 சிக்ஸர்களையு, அப்துல் சமாத் 3 சிக்ஸர்களையும் விளாச, அபிஷேக் சர்மா, ஐடன் மார்க்ரம் தலா 2 சிக்ஸர்களை அடித்தனர். இதனால் இப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியைச் சேர்ந்த வீரர்கள் 22 சிக்ஸர்களை விளாசி, ஐபிஎல் தொடர் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்களை குவித்த அணி எனும் சாதனையையும் படைத்துள்ளது.
- 22 -சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ஆர்சிபி, பெங்களூரு, 2024
- 21 - ஆர்சிபி vs புனே வாரியர்ஸ், பெங்களூரு, 2013
- 20 - ஆர்சிபி vs குஜராத் லையன்ஸ், பெங்களூரு, 2016
- 20 - டெல்லி கேப்பிட்டல்ஸ் vs குஜராத் லையன்ஸ், டெல்லி, 2017
- 20 - மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ஹைதராபாத், 2024