எங்கள் வீரர்கள் விளையாடிய விதத்தை நினைத்து பெருமை கொள்கிறேன் - சஞ்சு சாம்சன்!

Updated: Sat, May 25 2024 13:07 IST
Image Source: Google

17ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் இரண்டாவது குவாலிபையர் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தன் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணியின் அதிரடி தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 12 ரன்களை எடுத்த நிலையில் முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்தார். 

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ராகுல் திரிபாதி அதிரடியாக விளையாடி 15 பந்துகளில் 37 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஐடன் மார்க்ரமும் ஒரு ரன்னுடன் பெவிலியனுக்கு நடைடைக் கட்டினார். அதன்பின் டிராஸ்விஸ் ஹெட் 34 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய நிதீஷ் குமார் ரெட்டி, அப்துல் சமத் ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர்.

இருப்பினும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஹென்ரிச் கிளாசென் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்த கையோடு பெவிலியன் திரும்பினார். இடஹ்னால் 20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களைச் சேர்த்தது. ராஜஸ்தான் சார்பில் சிறப்பாக பந்துவீசிய டிரென்ட் போல்ட் மற்றும் ஆவேஷ் கான் தலா 3 விக்கெட்டுகளையும், சந்தீப் கிஷன் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையாடுத்து இலக்கை நோக்கி விலையாடிய ராஜஸ்தான் அணியில் டாம் கொஹ்லர் காட்மோர் 10 ரன்களுக்கும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 42 ரன்களிலும், நட்சத்திர வீரர்கள் சஞ்சு சாம்சன், ரியான் பராக், ஷிம்ரான் ஹெட்மையர் உள்ளிட்ட வீரர்களும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, இறுதிவரை போராடிய துருவ் ஜுரெலும் 55 ரன்களைச் சேர்த்த போது, அந்த அணியால் இலக்கை எட்டமுடியவில்லை. 

இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 139 ரன்களை மட்டுமே சேர்த்தது. ஹைதராபாத் அணி தரப்பில் ஷபாஸ் அஹ்மத், அபிஷேக் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. 

இந்நிலையில் இப்போட்டியின் தோல்வி குறித்து பேசிய ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன், “இந்த போட்டியில் தோல்வியடைந்துள்ளது ஏமாற்றமாக இருந்தாலும், எங்கள் வீரர்கள் விளையாடிய விதத்தை நினைத்து பெருமை கொள்கிறேன். பேட்டிங்கில் நாங்கள் சரியாக செயல்படவில்லை என்பது உண்மை, ஆனால் பந்துவீச்சில் எங்கள் வீரர்கள் மிக சிறப்பாக செயல்பட்டனர். மிடில் ஓவர்களில் ஹைதராபாத் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வதில் தடுமாறிவிட்டோம்.

ஹைதராபாத் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் நாங்கள் திணறியது போட்டியில் திருப்புமுனையையும் ஏற்படுத்திவிட்டது. இரண்டாவது இன்னிங்ஸின் போது பனிப்பொழிவு இருக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் நாங்கள் நினைத்தது போல் எதுவும் நடக்கவில்லை. இரண்டாவது இன்னிங்ஸில் ஆடுகளத்தின் தன்மை முற்றிலுமாக மாறுபட்டு இருந்தது. ஆதனால் ஹைதராபாத் அணியின் சுழற்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது.

நாங்கள் இந்த ஒரு தொடரில் மட்டும் இல்லாமல் கடந்த மூன்று வருடங்களாகவே சிறப்பான கிரிக்கெட்டை வெளிப்படுத்தி வருகிறோம். சில தலைசிறந்த இளம் வீரர்களை நாங்கள் கண்டெடுத்து அவர்களை சிறந்த முறையில் உருவாக்கி வருகிறோம். துருவ் ஜூரல், ரியான் பிராக் உள்ளிட்ட இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருவது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மட்டும் இல்லாமல் இந்திய கிரிக்கெட் அணிக்கும் நல்ல விசயமாக நான் பார்க்கிறேன்.

சந்தீப் சர்மா குறித்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஏனெனில் ஏலத்தில் எடுக்கப்படாமல் இருந்த சமயத்திலும் மாற்று வீரராக எங்கள் அணியில் இடம்பிடித்ததுடன் பல அபாரமான ஆட்டங்களையும் வழங்கி வருகிறார்.  கடந்த இரண்டு வருடங்களின் அவரின் பந்துவீச்சை எடுத்துக்கொண்டால் பும்ராவுக்குப் பிறகு சந்தீப் ஷர்மாதான் மிகச்சிறந்து பந்துவீச்சாளர்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை