ஐபிஎல் 2024: மார்ச் 22-இல் தொடங்கும் ஐபிஎல் தொடர்; ரசிகர்கள் கொண்டாட்டம்!

Updated: Mon, Jan 22 2024 11:46 IST
Image Source: Google

இந்தியாவில் தொடங்கப்பட்ட டி20 கிரிக்கெட் லீக் தொடரான ஐபிஎல் என்றழைக்கப்படும் இந்திய பிரீமியர் லீக் டி20 தொடர் இதுவரை 16 சீசன்களை கடந்து, வெற்றிகரமான 17ஆவது சீசனை நோக்கி நகர்ந்து வருகிறது. இத்தொடருக்கான வீரர்கள் மினி ஏலமும் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற நிலையில் அதில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ரூ. 24.5 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.  இதன்மூலம் ஐபிஎல் தொடரில் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர் எனும் சாதனையையும் அவர் படைத்தார்.

அவரைத்தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் ரூ.20 கோடிக்கு மேல் ஏலத்தில் எடுக்கப்பட்டிருந்தார். இதனால் இத்தொடரின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பும் பண்மடங்கு அதிகரித்திருந்தது. அதேசமயம் நடப்பாண்டு ஐசிசியின் டி20 உலகக்கோப்பை தொடரும் நடைபெறவுள்ளதால் அதற்கு தயாராகும் வகையிலும் இத்தொடர் அமைந்துள்ளதால் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நட்சத்திர வீரர்களும் இதில் பங்கேற்க ஆர்வம் காட்டி வருகின்றனர். 

இந்நிலையில் ஐபிஎல் 17ஆவது சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி மார்ச் 22ஆம் தேதி தொடங்கப்பட்டு தொடரின் இறுதிப்போட்டியானது மே 26ஆம் தேதி முடிவடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இத்தொடருக்கான போட்டி அட்டவணையும் கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்ற தகவலும் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

அதேசமயம் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவது சீசன் பிப்ரவரி 22ஆம் தேதி தொடங்கி மார்ச் 17ஆம் தேதி வரை நடத்தப்படும் என்ற கூடுதல் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி மகளிரி பிரீமியர் லீக் தொடர் முடிந்த 5 நாள்களில் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ளது. மேலும் ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் வரும் ஜூன் 2ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.  இருப்பினும் இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தலும் இன்னும் இரண்டு மாதங்களில் நடைபெறும் என்பதால், தேர்தல் தேதி அறிவித்த பின்னரே ஐபிஎல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை