ஐபிஎல் 2025: குர்ஜப்னீத் சிங்கிற்கு பதிலாக டெவால்ட் பிரீவிஸை ஒப்பந்தம் செய்தது சிஎஸ்கே!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒருபக்கம் போட்டிகள் ஒவ்வொன்றும் சுவாரஸ்யத்தைக் கூட்டியுள்ள நிலையில், ஒவ்வொரு போட்டியிலும் ஏதெனும் ஒரு வீரர் காயமடைவதும் தொடர்கதையாகி வருகிறது.
அந்தவகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ருதுராஜ் கெய்க்வாட் முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார். இதனையடுத்து அவருக்கு பதிலாக மும்பையைச் சேர்ந்த இளம் தொடக்க வீரர் ஆயுஷ் மத்ரே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யட்டுள்ளார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னரே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சிக்காக அழைக்கப்பட்டிருந்த நிலையில் தற்சமயம் அணியிலும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இதன்மூலம் ருதுராஜ் கெய்க்வாட் இடத்தில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அதற்கேற்றவகையில் கடந்த போட்டியிலும் கூட ஷேக் ரஷீது எனும் இளம் வீரர் லெவனில் இடம்பிடித்ததுடன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார். இருப்பினும் அணியின் மிடில் ஆர்டரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டர்கள் மீண்டும் மீண்டும் ரன்களைச் சேர்க்க முடியாமல் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து வருவது அணிக்கு பெரும் அழுத்தத்தை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில் தான் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 21 வயது இளம் அதிரடி பேட்டர் டெவால்ட் பிரீவிஸை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி காயம் காரணமாக விலகிய குர்ஜப்னீத் சிங்கிற்கு பதிலாக டெவால்ட் பிரீவிஸை ரூ.2.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது சிஸ்கே. இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பிரிவானது வலிமைப்பெற்றுள்ளதாக கணிக்கப்படுகிறது.
ஏனெனில் தென் ஆப்பிரிக்காவின் வருங்கால நட்சத்திரமாகக் கருதப்படும் பிரீவிஸ் தனது அதிரடியான பேட்டிங்கின் காரணமாக ரசிகர்கள் அவரை பேபி ஏபிடி என்றும் அழைத்து வருகின்றனர். மேற்கொண்டு இதுவரை 81 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள பிரீவிஸ், ஒரு சதம் மற்றும் 7 அரைசதங்களுடன் 1787 ரன்களைக் குவித்துள்ளார். ஆனாலும் ஐபிஎல் தொடரில் அவரின் ஃபார்ம் பெரிதளவில் இருந்ததில்லை.
முன்னதக 2022ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 10 போட்டிகளில் விளையாடி 230 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி அவரை விடுத்த நிலையில், நடந்து முடிந்த வீரர்கள் ஏலத்திலும் அவரை எந்த அணியும் ஏலம் எடுக்க முன் வரவில்லை. ஆனால் நடந்து முடிந்த எஸ் ஏ டி20 லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணிக்காக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி மீண்டும் கவனத்தை ஈர்த்தார்.
அதிலும் குறிப்பாக அவர் 12 போட்டிகளில் 10 இன்னிங்ஸ்களில் விளையாடி 48.5 என்ற சராசரியில் 291 ரன்களைக் குவித்தார். மேற்கொண்டு கேப்டவுன் அணியானது சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கும் முக்கிய காரணமாக அமைந்தார். தற்சமயம் சிஎஸ்கே அணியில் வெளிநாட்டு பேட்டர்கள் ரன்களைச் சேர்க்க தவறிவரும் நிலையில், பிரீவிஸ் அணியில் இணைந்திருப்பது நிச்சயம் அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.
Also Read: Funding To Save Test Cricket
சென்னை சூப்பர் கிங்ஸ்: எம்எஸ் தோனி (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, மதீஷா பதிரானா, நூர் அகமது, ரவிச்சந்திரன் அஸ்வின், டெவோன் கான்வே, கலீல் அகமது, ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, விஜய் சங்கர், சாம் கரன், ஷேக் ரஷித், ஆயுஷ் மாத்ரே, அன்ஷுல் கம்போஜ், முகேஷ் சௌத்ரி, தீபக் ஹூடா, டெவால்ட் பிரீவிஸ், நாதன் எல்லிஸ், ஜேமி ஓவர்டன், கமலேஷ் நாகர்கோட்டி, ராமகிருஷ்ணன் கோஷ், ஸ்ரேயாஸ் கோபால், வான்ஷ் பேடி, ஆண்ட்ரே சித்தார்த்.