ஐபிஎல் 2025: அஷுதோஷ் அபாரம்; குஜராத் டைட்டன்ஸுக்கு 204 டார்கெட்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலபப்ரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு கருண் நாயர் மற்றும் அபிஷேக் போரல் இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியில் அதிரடியாக தொடங்கிய அபிஷேக் போரல் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 18 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் கருண் நாயருடன் இணைந்த கேஎல் ராகுல் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினார். பின் கேஎல் ராகுலும் தனது பங்கிற்கு 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 28 ரன்களிலும், மற்றொரு தொடக்க வீரரான கருண் நாயரும் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 31 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
பின்னர் இணைந்த கேப்டன் அக்ஸர் படேல் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன் ஸ்கோரையும் சீரான வேகத்தில் உயர்த்தினர். மேற்கொண்டு இருவரும் இணைந்து 4ஆவது விக்கெட்டிற்கு 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் 2 பவுண்டரிகள் ஒரு சிக்ஸர் என 31 ரன்களில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆட்டமிழந்தார். மேற்கொண்டு 38 ரன்களை எடுத்திருந்த கேப்டன் அக்ஸர் படேலும் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய இளம் வீர்ர் விப்ரஜ் நிகாமும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார்.
Also Read: Funding To Save Test Cricket
அவர்களைத்தொடர்ந்து இம்பேக்ட் வீர்ராக களமிறங்கிய டோனவன் ஃபெரீராவும் ஒரு ரன்னுடன் நடையைக் கட்டினார். அதேசமயம் இப்போட்டியில் அதிரடியாக விளையாடி வந்த அஷுதோஷ் சர்மாவும் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 37 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். இறுதில் கடைசி பந்தில் குல்தீப் யாதவ் பவுண்டரி அடிக்க, இதன் காரணமாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்களைச் சேர்த்தது. குஜராத் டைட்டன்ஸ் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய பிரஷித் கிருஷணா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.