ஐபிஎல் 2025: பிரசித் கிருஷ்ணா அபாரம்; மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ்!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 9ஆவது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன்கள் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஷுப்மன் கில் மற்றும் சாய் சுதர்ஷன் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்து பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசித்தள்ளினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 78 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், கேப்டன் ஷுப்மன் கில் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 38 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஜோஸ் பட்லரும் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார்.
இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய் சுதர்ஷன் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார். மேற்கொண்டு இருவரும் இணைந்து 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில், ஜோஸ் பட்லர் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 39 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஷாருக் கானும் அதிரடியாக விளையாடும் முயற்சியில் 9 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சாய் சுதர்ஷனும் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் என 63 ரன்களைச் சேர்த்து தனது விக்கெட்டை இழந்தார்.
இறுதியில் ராகுல் திவேத்தியா ரன்கள் ஏதுமின்றியும், அதிரடியாக விளையாடி வந்த ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் 2 சிக்ஸர்களுடன் 18 ரன்களிலும், ரஷித் கான் ஒரு சிக்ஸருடன் 6 ரன்களிலும், சாய் கிஷோர் ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதன் காரணமாக குஜராத் டைட்டன்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்களைச் சேர்த்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில் கேப்டன் ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளையும், ட்ரென்ட் போல்ட், தீபக் சஹார், முஜீப் உர் ரஹ்மான் மற்றும் சத்யநாராயன ராஜு ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் சர்மா மற்றும் ரியா ரிக்கெல்டன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசிய நிலையில் 8 ரன்களுக்கும், ரியான் ரிக்கெல்டன் 6 ரன்களிலும் என அடுத்தடுத்து முகமது சிராஜ் பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதன்பின் இணைந்த திலக் வர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தும் முயற்சியில் இறங்கினர்.
இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 60 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் திலக் வர்மா 39 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ராபின் மின்ஸும் 3 ரன்களுடன் நடையைக் கட்டினார். மேற்கொண்டு பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சூர்யகுமார் யாதவ் அரசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 48 ரன்களை எடுத்திருந்த நிலையில் விகெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதனால் மும்பை அணியின் தோல்வியும் உறுதியானது.
Also Read: Funding To Save Test Cricket
மேற்கொண்டு கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் 11 ரன்களுக்கு நடையைக் கட்ட, இறுதியில் அதிரடியாக விளையாடிய நமன் தீர் 18 ரன்களையும், மிட்செல் சாண்ட்னர் 18 ரன்களையும் சேர்க்க மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் மிடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்களை மட்டுமே சேர்த்தது. குஜராத் அணி தரப்பில் முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.