ஐபிஎல் 2025: ஷுப்மன், சாய் சுதர்ஷன் அரைசதம்; லக்னோ அணிக்கு 181 டார்கெட்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 26ஆவது லீக் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூபப்ர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தின.
லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இன்றைய போட்டிக்கான லக்னோ அணியில் மிட்செல் மார்ஷுக்கு பதிலாக ஹிம்மத் சிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், குஜராத் டைட்டன்ஸ் தரப்பில் குல்வந்திற்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் லெவனில் சேர்க்கப்பட்டனர். இதனையடுத்து களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் சாய் சுதர்ஷன் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இருவரும் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியதுடன் தங்களின் அரைசதங்களையும் பூர்த்தி செய்தனர். இதன்மூலம் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 120 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். அதன்பின் சிறப்பாக விளையாடி வந்த கேப்டன் ஷுப்மன் கில் 6 பவுண்டரி ஒரு சிக்ஸர் என 60 ரன்களில் நடையைக்கட்ட, அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான சாய் சுதர்ஷனும் 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 56 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் 2 ரன்களுக்கும், ஜோஸ் பட்லர் 16 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர்.
Also Read: Funding To Save Test Cricket
இறுதியில் ஷெர்ஃபேன் ரூத்ரஃபோர்ட் - ஷாரூக் கான் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் 22 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ராகுல் திவேத்தியா ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷாருக் கான் 11 ரன்களையும், ரஷித் கான் 4 ரன்களையும் சேர்த்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்களைச் சேர்த்தது. லக்னோ அணி தரப்பில் ரவி பிஷ்னோய் மற்றும் ஷர்தூல் தாக்கூர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.